புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநில அதிமுகவும், அம்மா அறக்கட்டளையும் இணைந்து வருகிற 27-ம் தேதி அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஜவுளி, ஐடி, மருத்துவமனை, வங்கி, நிதி, மென்பொருள் (Textile, IT, Hopital, Bank, Finance, Software) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்று தகுதியான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் சுய விவர குறிப்பு மற்றும் படிப்பு சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் அதிகார மோதலினால் பல துறைகளில் பல மாதங்களாக துறை இயக்குநர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளுக்கான அனுமதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. துறைமுகத்துறை, கலை பண்பாட்டுத்துறை, அரசு அச்சகம், விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயக்குநர்கள் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. அதே போன்று ஒரே அதிகாரி பல துறைகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்புகள் ஏற்றுள்ள அதிகாரிகள் தங்களது பணி சுமையால் தாங்கள் ஏற்றுள்ள துறைகளில் தங்கள் பணிகளை சரிவர செய்யமுடியாத நிலை உள்ளது.
கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, துறைமுகத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலத்தோடு நிரப்பப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு துறைமுகத்துறையில் கடந்த பல மாதங்களாக இயக்குநர் இல்லை. அதே போன்று முதன்மை பொறியாளர் இல்லை. மூன்று உதவி பொறியாளர்களில் ஒருவர் மட்டுமே இருக்கின்றார். 14 துணை பொறியாளர்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இன்னும் பல பதவிகளில் துறைமுகத்துறையில் நிரப்பப்படாமல் உள்ளது. துறைமுகத்துறையின் சிறந்த செயல்பாட்டினால் மாநிலத்தின் நலனும் வருவாய் பெருக்கமும் ஏற்படும். ஆனால் தற்போது உள்ள துறைமுகத்துறை முழுமையாக செயலிழந்து எவ்வித பணியும் நடைபெறாமல் கோமா நிலைக்கு சென்றுள்ளது.
பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து தங்களது சொந்த பணத்தில் சுற்றுலா படகுகள் வாங்கி அதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்து ஏறத்தாழ பத்து மாதம் காலமாக அனுமதி வழங்கப்படாமல் உள்ளதால் முதலீடு செய்த மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா படகு அனுமதிக்காக பத்துக்கும் மேற்பட்ட துறைகளின் அனுமதி பெற்று ஓராண்டுக்கான இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி அதன் காலக்கெடுவும் முடிவுற்ற நிலையில் இதுவரை சுற்றுலா படகுக்கான அனுமதியை அரசால் வழங்க முடியவில்லை. இது சம்பந்தமான கோப்புகளை பார்வையிட கூட துறைமுகத்துறையில் போதிய அரசு ஊழியர்கள் இல்லை.
தனி நபர் சுய தொழில் ஊக்குவிக்கப்படும் என அரசு அவ்வப்போது அறிவித்தாலும் தனது சொந்த முதலீட்டில் ஆற்றுப்பகுதியில் முகத்துவார நுழைவுவாயில் வரை சுற்றுலா படகுகள் விடுவதற்கான அனுமதியை கூட அரசால் உடனடியாக வழங்க முடியவில்லை. அதற்கு ஆயிரத்தெட்டு சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சுற்றுலா குரூஸ் சொகுசு கப்பலுக்கு மட்டும் பத்தே தினங்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் தங்களது முழு ஒத்துழைப்பையும் மனதார வழங்கினர். ஆனால் ஒரு ஏழை மீனவன் வட்டிக்கு கடன் வாங்கி ரூ.6 லட்சம், ரூ.7 லட்சத்தில் ஒரு சிறிய படகு செய்து படகு விட அனுமதி கேட்டால் இந்த அரசு அந்த அனுமதி கேட்கும் மீனவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாவை பயன்படுத்தி சுய தொழில் புரிவோருக்கு துணைநிற்க வேண்டிய சுற்றுலாத்துறையின் செயல்பாடு பல துறைகளுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாகும். இந்த துறையின் இயக்குநர் சிறு வயதாக இருந்தாலும் ஏழைகளுக்கான அனுமதி வழங்குவதில் விருப்பமற்றவராக இருக்கின்றார். அவ்வப்போது வெளிநாடு, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இவர் சுற்றுலா செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கூட 4 நபர்கள் கூட பணி செய்யாத சுற்றுலாத்துறையை ஆய்வு செய்ய கடந்த 4 நாட்களாக மாகேயில் தங்கியுள்ளார். சாதாரணமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாகேவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கலாம். ஆனால் அதை விடுத்து தொடர்ந்து தான் பதவி வகிக்கும் சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அவர் பணி செய்வதே அரிதாக உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஆட்சியாளர்களின் மோதல் போக்கினால் அவ்வித நடவடிக்கையும் யார் மீதும் எடுக்க முடியாத நிலை உள்ளதை சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இது சம்பந்தமாக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு லட்சுமிநாராயணன் மற்றும் முதலமைச்சர் ஆகியோருடன் 50-க்கும் மேற்பட்ட முறை மீனவர்களோடு சென்று முறையிட்டும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து சில அதிகாரிகள் உதாசீனம் செய்து வருகின்றனர். இது சரியான அனுகுமுறை அல்ல.
அரசின் அனுமதிக்காக ஒருவர் விண்ணப்பம் அளித்தால் அவருக்கு குறைந்தது 15 தினங்களுக்குள் அதற்கான தீர்வினை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை சட்டமன்றத்தில் பல்வேறு அரசால் அறிவுறுத்தப்பட்டும் அரசு அதிகாரிகள் சாதாரண ஏழை மீனவ சமுதாய மக்கள் விஷயத்தில் அலட்சித்துடன் நடந்துகொள்வது ஏன் என்றே தெரியவில்லை. மீனவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது மாநில கழக இணைச்செயலாளர் ஆர் .வி . திருநாவுக்கரசு, மாநில கழக துணைச் செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி மற்றும் வேலவன், முனியன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.