புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அந்தந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இடங்களை மாநில இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிவில் அப்பீல் எண்.9289/2019 மற்றும் WRIT PETITION (C) NO.1183/2020 மீது கடந்த 29-01-2025 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது
அந்த தீர்ப்பில் மாநில ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் அமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாது என்றும், மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நீட் தேர்வு தேர்ச்சியை தகுதியாக கொண்டே அகில இந்திய அளவில் நிரப்ப வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது இந்த தீர்ப்பின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மாணவர்கள் முழுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/e8e92ecf-7df.jpg)
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 370 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் பிம்ஸ் மருத்துவ கல்லூரி 31 இடங்கள், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி 61 இடங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி 66 இடங்கள், இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி 21 இடங்கள் என. 186 முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு இடஒதுக்கீடாக மொத்தம் 50 சதவிதம் புதுச்சேரியை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகு அடுத்த கல்வியாண்டில் இருந்து புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவத்தில் வழங்கப்பட்ட 50 சதவீதமான இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அது அகில இந்திய இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் நம் மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நம் மாநிலத்தில் வசிக்காத பிற மாநில மாணவர்களுக்கு கிடைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது
இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த நம் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த முதுநிலை கல்வி பயில முடியாத ஒரு அபாயகரமான சூழ்நிலை ஏற்படும் இந்த தீர்ப்பின் உண்மை நிலையை உணர்ந்து பல தென்னிந்திய மாநிலங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. எனவே நாமும் நமது மாநில மாணவர்களின் நலன் காக்க அரசு சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியின் போது மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் பாப்பசாமி, மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.