புதுச்சேரி மாநிலத்தின் 2025 - 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ. 3,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியின் பட்ஜெட் உரையின் மீது புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
ஆண்டுதோறும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்ட உரை மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உரையாக இருக்க வேண்டும். மாறாக, இவ்வாண்டு பட்ஜெட் என்பது அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறும் ஏழை எளிய மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாகும்.
2025-26 வரவு செலவு திட்ட மதிப்பீடு 13600 கோடி மாநில வருவாய் 7641. 40 கோடி மத்திய அரசின் நிதி உதவி 3432-18 கோடி, மத்திய அரசின் திட்டத்திற்கு 400 கோடி மத்திய சாலை நிதிக்கு 25 கோடி என மொத்தம் 3857 .18 கோடி ரூபாய் மத்திய நிதியுதவியாகும் பற்றாக்குறை 2101.42 கோடியாக உள்ளது. பற்றாக்குறையை சரிசெய்ய கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது
ஆண்டுக்காண்டு கடன் தொகை அதிகமாக கொண்டிருப்பதால் மொத்த பட்ஜெட்டில் 13.73 சதவீதம் சுமார் 1867 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டிக்காக மத்திய அரசிடம் செலுத்துகிறோம் இந்நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் 2000 கோடி அளவிற்கு கடன் பெறுதல் அவசியமற்ற ஒன்றாகும்.
மாறாக மாநிலத்தின் நிதி வருவாய் ஈட்டும் கலால் துறை. பத்திரப்பதிவு துறை, விற்பனை வரித் துறை, போக்குவரத்துத் துறையால் வரும் வரி வருவாயை நேர்வழி படுத்தினாலேயே ஆண்டுக்கு 1500 கோடிக்கு மேல் அரசுக்கு கூடுல் வருவாய் வரும்
மதுபான கொள்முதல் மதுபான விநியோகம் இவை இரண்டையும் தனியாருக்கு வழங்காமல் அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு ரூ 1000 கோடிக்கு மேல் கலால் துறையில் கூடுதல் வருவாய் வரும் ஆனால் இதில் சிறிதளவு கூட ஆளும் அரசு அக்கறை செலுத்தாமல் இரு கண்களை இழுத்து மூடிக்கொண்டு மொத்த மதுபான விநியோகஸ்தர்கள் பயன்பெறும் விதத்தில் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவராமல் அரசு செயல்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு மேல் உயர்த்தப்படாமல் உள்ள நில மதிப்பீட்டு மதிப்பை (ஜிஎல்ஆர்) உயர்த்தாமல் நில விற்பனையாளர்களுக்கு சாதகமான நிலையை அரசு எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று போக்குவரத்துத் துறையில் வரிமாற்றம் செய்தால் ஆண்டுக்கு பலநூறு கோடி ரூபாய் வருவாய் வரும்.
விற்பனை வரித்துறையில் உள்கட்ட அமைப்புகள் நவீனப்படுத்தப் படாமலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் இன்னும் பல வர்த்தக வியாபார நிலையங்களில் கம்யூட்டர் பில் போடாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன இதனால் அரசுக்கு வரவேண்டிய ரூ.300 கோடிக்கு மேலான விற்பனை வரி வியாபாரிகளிடம் தஞ்சம்மடைந்துள்ளது
கல்வி முழுக்க முழுக்க வியாபாரமான நிலையில் கல்வி நிலையங்களுக்கு சொத்துவரி, கட்டிட வரிகள் வசூலிக்கப்படாமல் அரசின் வருவாயை ஆண்டு தோறும் இழந்து வருகிறது. அரசின் எவ்வித மாதாந்திர உதவித்தொகை பெறாத குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் மாதாந்திர 1000 ரூபாய் 2500 ரூபாயக உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கதக்க முடிவாகும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உயர்த்ப்பட்டுள்ளது வரவேற்க தக்கதாகும்.
ஆதிதிராவிட, பழங்குடி இனைத்தைச் சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னிகள்கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வுதியத்துடன் ரூ 500 வழங்க இருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஓய்வூதியம் பெறும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ 500 உயர்த்தி வழங்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு கடந்த தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப் பட்ட சிறு கடனகள் மற்றும் சுய தொழில் புரிய கடனுதவித் திட்டங்கள் இந்த ஆண்டும் திரும்ப செயல்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக வக்பு வாரிய அமைக்கப்படாத புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த ஆண்டும் வக்பு வாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்படாதது முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்
கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பு நிறுவனங்களின் சொத்துக்கள் அவை ஏற்கனவே பெற்றிருந்த கடனுக்காகவும் நிலுவை பாக்கிக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்களை உருவாக்க 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் அரசின் நிதியுதவியைப் பெற்று பயன்பெறும் ஏழைஎளிய நடுத்தர மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் ஒருசில குறைகள் இருந்தாலும் அதிமுக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.