புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி குறித்து துணைநிலை ஆளுநரின் அக்கறை, துணைநிலை ஆளுநரின் உரை மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் திட்ட உரைகளை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்குவதை மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் மத்திய அரசு மூலம் உறுதி செய்ய வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவு இவை இரண்டையும் மீறி கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவோம் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா ஆணவத்துடன் அறிவித்துள்ளார். மேகதாது அணை சம்பந்தமாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போத அதை உறுதியாக எதிர்த்தனர். தற்போது தமிழகத்தின் விடியா திமுக அரசின் முதலமைச்சராக இருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள் தமிழக விவசாயிகளின் நலனை முற்றிலுமாக புறக்கணித்து தனது கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்க கூட வக்கில்லாமல் தமிழகத்திற்கு துரோகத்தை செய்கிறார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியின் கடைமடை பகுதியான நம் மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். எனவே கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயலை கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சுமார் மூன்றேகால் லட்சம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த வழக்கில் நம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 7 அப்பாவி மீனவர்கள் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு உடனடியாக செலுத்தி அங்கிருக்கும் மீனவர்களை விடுவிக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.