புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரத்து செய்ய முடியாத நீட் தேர்வு விவரத்தில் மாணவர்களை ஏமாற்றி மாணவர்களை நடுக்கடலில் தத்தளிக்க வைத்து விட்டு தற்போது நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என தி.மு.க - காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடின. தற்போது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து விட்டு மாணவர்களை ஏமாற்றி பொய்யான தகவல்களை தெரிவித்து அரசியல் ஆதாயம் தேடும் ஒரு பணியை கடந்த சில நாட்களாக தமிழக தி.மு.க-வும் - காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டிருப்பது மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த தி.மு.க, - காங்கிரஸ் கட்சியினர் இன்று மும்மொழிக் கொள்கை என்ற ஒரு பொய்யான, ஒரு பூச்சாண்டியை எடுத்துக் கூறி மாணவர்களையும், மாணவர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு தனது இயலாமையை மூடி மறைத்துள்ளனர்.
மதுபான மொத்த வியாபாரம், போலி மதுபானங்கள் விற்பனை, போலியா ஹாலோகிராம் மூலம் ஆண்டுக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அமலாக்கத்துறை சார்பில் செய்திகள் வெளிவந்துள்ளன. அதை மடைமாற்றம் செய்யவும், மறைக்கவும் தமிழக தி.மு.க அரசு மும்மொழிக் கொள்கையை முன்வைத்து தவறாக கையாண்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மும்மொழி பாடத்திட்டம் நம் மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய தேசிய கல்வி கொள்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டு தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுது வருகின்றனர்.
புதிய தேசிய கல்வி கொள்கை சம்பந்தமான பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்றத்தில் நாடகமாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவு என்ன காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் அதன் நிலைப்பாடு என்ன?.
தமிழ்நாட்டில் இந்தியை திணித்தது காங்கிரஸ் அரசு. அதை விரட்டி அடித்தவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியானது இன்று வரை தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.
மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்கும் செயலில் காங்கிரஸ், திமுக ஈடுபட்டு வருகின்றனர். இது முற்றிலுமாக வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டசபை நேரம் புனிதமான நேரம். இந்த நேரங்களில் அந்த நேரத்தையே வீணடித்து சட்டமன்ற கூட்டத்தின் நடவடிக்கையை வீண்டிக்கும் செயலில் காங்கிரஸ், திமுகவனர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி அமைத்துக்கொண்டு மும்மொழியை பற்றி பேசுவது கடைந்து எடுத்த நாடகதனமான செயலாகும்.
புதுச்சேரியில் பல பள்ளிகளில் தமிழ் கட்டாயமான படமாக இல்லை. தமிழே படிக்காமல் பல மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ் மொழி மீது இந்த அரசுக்கும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கும் அக்கறை இருந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுத் துறையில் பணி வழங்க முடியும் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வர முடியுமா?
இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என அரசு தீர்மானம் கொண்டு வந்தால் அதை மாண்புமிகு கழக பொதுச்செயலாளரின் கருத்துக்கு ஏற்ப அதிமுக ஆதரிக்கும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நகரபகுதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பிரதான கழிவு நீர் உப்பனாறு வாய்க்கால் மீது பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் மெத்தனம், அதிகாரிகளின் அலட்சியம், ஒப்பந்ததாரர்களின் சுயநலம் இவற்றினால் கூடுதலாக ரூ.60 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது. இதில் பெரும்பகுதி ஒப்பந்ததாரர்களுக்கு இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அரசை எதிர்த்து கூடுதல் பணம் கேட்டு வழக்குக்கு சென்றுள்ள மதுரையை சேர்ந்த அதே ஒப்பந்ததாரருக்கு சுமார் ரூ.30 கோடி அளவில் பணியை முடிக்க மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒரே பணியில் அரசை எதிர்த்து ஆர்பிட்டேஷன் முறையில் கூடுதல் தொகை கேட்டு வழக்கு பதிவு செய்துள்ள அதே நபருக்கு மீண்டும் அதே பணியை வழங்குவது இந்தியாவிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.