/indian-express-tamil/media/media_files/2025/04/17/Fdx1WTHeIKf4wk5N22KI.jpg)
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை துறைகளின் மூலமே வழங்குவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "அ.தி.மு.க-வின் நீண்ட நாள் கோரிக்கையான அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் முழு கல்வி உதவித்தொகை போன்று, மீனவ சமுதாய மாணவ பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இதற்கான அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சருக்கு அ.தி.மு.க சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மீன்வளத்துறை, அட்டவணை இனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் போது அந்த துறையில் உள்ள அதிகாரிகள் அதற்கான ஆணை கடிதம் மற்றும் கார்டுகளை மொத்தமாக சில சட்டமன்ற உறுப்பினர்களிடமே கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு துறைகளிடம் இருந்து பெறக்கூடிய நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை கடிதத்தை தங்களது கட்சியை சேர்ந்த அலுவலகத்திற்கு பயனாளிகளை வரவழைத்து வழங்கப்படுகிறது.
பொதுவாக அரசு சார்ந்த எந்த உதவிகளுக்கான ஆணை கடிதமும் அரசு அதிகாரிகளின் கைவசம் தான் இருக்க வேண்டும். தற்போது இதற்கு மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் இருப்பதால் பயனாளிகளுக்கு அந்த ஆணை கடிதத்தை கொடுக்கும் போது மாற்று கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பல விதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டு கூனி குறுகி இந்த அனுமதி கடிதத்தை பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து தலைமை செயலாளர் நலத்திட்ட உதவிகளை அரசு துறைகளின் மூலமே வழங்குவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு உணர்த்த வேண்டும்." என்று அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.