புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க ஆகியவர்கள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். மறுபுறம் மக்கள் விரோத ஆட்சி நடத்திய தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் மக்கள் என்.ஆர். தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். இந்த கூட்டணி என்பது வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் சிறந்த ஒரு நல்லாட்சியை புதுச்சேரி மாநிலத்தில் நடத்தி வருகிறது. கடந்த கால ஆட்சி போல இல்லாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கின்றி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், மாநில அந்தஸ்து பெற வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் அவர்கள் நிர்வாக ரீதியில் மாநில அந்தஸ்து இல்லாத சூழ்நிலையில் தனக்கு ஏற்படும் நெருடல் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த ஆட்சி அமைந்தாலும் மாநில அந்தஸ்து தேவை என்ற கருத்தை கூறியுள்ளார். அதற்கு வழக்கம் போல், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை கூறியதோடு அவரை கேவலப்படுத்தியும் பேசியுள்ளனர். மாநில அந்தஸ்தைப் பற்றி பேச தி.மு.க-வுக்கும் காங்கிரசுக்கும் அறுகதையில்லை.
இந்நிலையில் மாநில அந்தஸ்து பற்றி பேசிய முதலமைச்சரை அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், வேறு முதல்வரை நிறுத்தோம் என கூறியுள்ளார். கூட்டணி குறித்தும், முதலமைச்சர் மாற்றம் குறித்தும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் முடிவே இறுதியான முடிவாகும். மற்றவர்களுக்கு கூட்டணி குறித்தோ முதலமைச்சர் மாற்றம் குறித்தோ பேசும் உரிமை இல்லை.
வையாபுரி மணிகண்டனின் கருத்தை அதிமுகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள தேவையில்லை. அது அவரது சொந்த கருத்து. பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்க கூடிய இந்த சூழ்நிலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கருத்துகளை சொல்வது கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கட்கிகளின் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும். சொல்லக்கூடிய கருத்துக்கள் கட்சி தலைமையின் கருத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முதலமைச்சரையே மாற்ற வேண்டும் என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது சரியானது அல்ல.
புதுச்சேரி மாநில எதிர்கட்சி தலைவர் சிவா தான் ஒரு எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்துவிட்டு அரசு துறையில் இருக்க கூடிய ஒரு பெண் அதிகாரியை தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று தரக்குறைவாக பேசி மிரட்டி அவமரியாதை செய்துள்ளார். முதியோர் பென்ஷனை எப்படி எம்எல்ஏவிடம் கேட்காமல் கொடுக்கலாம் என பேசியுள்ளார். அதிகாரிகளை மிரட்டுவது என்பது ஆணவத்தின் உச்சகட்டம்.
முதியோர் பென்ஷனில் எம்.பி. நியமன எம்எல்ஏ, நீதிபதி ஆகியோர் கையெழுத்து போட்டு பரிந்துரை செய்யலாம். ஒவ்வொரு அரசாங்கம் உதவி பெறும் நலத்திட்டங்கள் பெறுவதில் திமுகவினரால் மிரட்டப்படுகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கும் இடத்தால் தான் நடைபெறுகிறது. இதன் பேரில் தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை அதிகாரி முத்துமீனாவை அழைத்து தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் அவரது தொண்டர்களால் அவமானப்படுத்தியிருந்தால் இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாக இருக்கிற துணைநிலை ஆளுநர் அவர்கள் ஒரு பெண்ணுக்கு நடந்த அவமரியாதையை தானாக முன்வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு முதியோர், விதவை பென்ஷன் பயனாளிகள் தேர்வு செய்யும் கமிட்டியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினராக இல்லாத நிலை இருக்கும் போது அவர் எப்படி எம்.எல்.ஏ-வாகிய எனக்கு தெரியாமல் கொடுப்பது தவறு என கேட்க முடியும். சட்டமன்ற உறுப்பினர் கையால் தான் பென்ஷன் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை. அதிகாரிகள் தான் வழங்க வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அ.தி.மு.க என்.ஆர்.காங்கிரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்று மக்களை திரட்டி மிகப்பொரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது மாநில கழக துணைத் தலைவர்,முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநிலக் கழக இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன்,,மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி,மீனவரணி செயலாளர் ஞானவேல், தொகுதி கழக செயலாளர்கள் சம்பத், கமல்தாஸ், குணசேகரன் பொதுக்குழு உறுப்பினர் பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.