Advertisment

நாராயணசாமிக்கு ஆண்மை இருந்தால் தி.மு.க அரசை எதிர்த்து போராட வேண்டும்: அ.தி.மு.க

கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்ததற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – புதுச்சேரி அ.தி.மு.க

author-image
WebDesk
New Update
puducherry news, aiadmk, anbazhagan, puducherry aiadmk attack on puducherry cabinet, puducherry cm rangasamy

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆண்மை இருந்தால் கள்ளசாராயத்தால் 22 பேர் உயிரிழப்புக்கு காரணமான தமிழக தி.மு.க அரசை கண்டித்து போராட்டம் நடத்த முன்வருவாரா? என புதுச்சேரி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் கூறியுள்ளார்

Advertisment

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் தலைமை கழகத்தில்  செய்தியாளர்களிடம் இன்று பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் கள்ளச்சாராயம் கிடையாது; அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் போலி மதுபானம் தயாரிக்க தமிழகத்தின் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு எரி சாராயம் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு கொண்டுச் செல்லப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தி.மு.க துணையோடு நேரடியாக பல தி.மு.க உறுப்பினர்களாக உள்ளவர்கள் தமிழகத்திற்கு போலி மதுபானம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பல முறை அ.தி.மு.க சார்பில் தொடர் குற்றச்சாட்டு கூறி வருகிறோம்.

இது சம்பந்தமாக புதுச்சேரி கலால் துறை மூலம் ஒரு சில வழக்குகள் பதியப்பட்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

அதேபோன்று புதுச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவாவின் தொகுதியான வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் இருந்து மதுபான தொழிற்சாலை அமைக்கப்பட்டதாக பலமுறை அ.தி.மு.க சார்பில் கூறியிருந்தோம். அதேபோல் காரைக்காலில் இருந்தும் தி.மு.க பிரமுகரின் தலைமையின் கீழ் மதுபானம் மற்றும் போலி சாராயம் தமிழக பகுதிகளான கடலூர், நாகப்பட்டினம், சிதம்பரம், சீ்ர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுவதாக கூறியுள்ளோம்.

கலால் துறையின் துணை ஆணையரின் கையெழுத்தை போலியாக வைத்து கர்நாடகத்திலிருந்து போலி பெர்மிட் மூலம் மதுபான ஆர்.எஸ் கொண்டுவரப்பட்டது என குற்றச்சாட்டு கூறியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுச்சேரி கலால்துறை பாராமுகமாக செயல்பட்டு வந்த நிலையில் 4 தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் செங்கல்பட்டு,, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மெத்தனால் என்ற ரசாயன எரி சாராயத்தை புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கடத்த அனுமதித்ததால் 20-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தமிழக முதலமைச்சர், துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மஸ்தான் மற்றும் கடத்தலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென அறிக்கை வெளியிட்டார்.

நாங்கள் கூறியபடி சம்பந்தபட்டவர்கள் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தல் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம். மெழுகுவர்த்தி தயாரிக்கவும், சிரஞ்சி, சானிடைசர், இருமல் மருந்து தயாரிக்க மூலப்பொருளாக இந்த மெத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலப் பொருட்கள் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் தற்போது இயங்கப்படவில்லை. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட மெத்தனால் அதிக தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் புதுச்சேரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஏழுமலை. அவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர். வில்லியனூர் தொகுதி தட்டாஞ்சாவடி கிளை செயலாளராக உள்ளார். தி.மு.க எம்.எல்.ஏ.,வும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவாவிற்கு நெருக்கமானவர். இது போன்ற குற்றச்செயலில் அதிகம் ஈடுபட்டு வருபவர்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் தான். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள தி.மு.க.,வினர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு கூட்டு வைத்து இது போன்ற செயல்களை ஈடுபட்டு வருகின்றனர்

22 பேர் இந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர். ஆனால் இது தொடர்பாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதே அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் அரசுக்கு எந்த வருமானமும் கிடையாது. அதற்கு பதிலாக மதுபான கடைக்கு அனுமதி கொடுத்து விடலாம்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆண்மை இருந்தால் கள்ளசாராயத்தால் 22 பேர் உயிரிழப்புக்கு காரணமான தமிழக தி.மு.க அரசை கண்டித்து போராட்டம் நடத்த முன்வருவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகரக் கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment