புதுச்சேரி 15-வது சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் மாதம் 10-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 09:30 மணிக்கு கவர்னர் உரை உரையுடன் கூடுகிறது என இன்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
இது குறித்து இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் சட்டசபை மார்ச் மாதம் 10 ஆம் தேதி கூடுகிறது. புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 17-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024- 25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரானது கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். எனவே, கவர்னர் கைலாஷ் நாதனிடம் நேரம் கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 10 தேதி சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய சபாநாயகர் செல்வம், சமீபத்தில் சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மணவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார், அப்படி போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார் என்றும் அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.