பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான இரா. சிவா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய வரவு–செலவு திட்டத்திற்கு சொல்ல கூடிய காரணங்கள் எல்லாம் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதம் வேலை செய்ய முடியவில்லை. திட்ட ஒதுக்கீட்டில் ரூ. 300 கோடி அளவிற்கு வேலை செய்ய முடியவில்லை. கடந்த காலத்தில் அதில் ரூ. 500 கோடி அளவிற்கு துண்டு விழுந்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டத்தில் ரூ. 650 கோடியில் ரூ. 200 கோடி தான் வேலை செய்துள்ளார்கள். மிதமுள்ள ரூ. 400 கோடி செலவு செய்யவில்லை. இதுகுறித்த கேள்வியை நான் கூட்டத்தில் முன்வைத்தேன்.
வரவு–செலவை பார்க்கும் கூட்டமாக நாங்கள் இதை பார்க்காமல் வருங்காலத்தில் சொல்வது எதையும் செய்யாமல் இருப்பதை வாடிக்கையாக கொள்ளாமல், தமிழகத்தில் எப்படி சொல்வதை செயல்படுத்துகிறார்களோ அதைப்போல் தாங்களும் செயல்படுத்துகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். மாநிலத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள மாநிலத்தின் கடன் தொகை மற்றும் அதற்கு செலுத்தும் வட்டித்தொகை குறைப்பதற்கான வழியை ஆராய வேண்டும். மாநிலத்தில் நலத்திட்டங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது என்றால் வட்டிக்கு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி கட்டப்படுகிறது. இது மாநில வளர்ச்சியை மிகவும் பாதிக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/0fb83812-fcf.jpg)
புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்குண்டான புதிய தொழில் கொள்கையை இந்த அரசு கொண்டு வர வேண்டும். சுற்றுலா நகரமாக இருக்கின்ற புதுச்சேரியில் புதிய திட்டம் எதையும் இந்த அரசு கொண்டுவரவில்லை. குறிப்பாக நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் உள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்று காலாவிதியாகி விட்டது. புதிய திட்டமும் தோல்வி கண்டு மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஏஎப்டி திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தற்போதே குடிநீரில் உப்புநீர் கலந்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய சவாளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து ஏஎப்டி அத்திட்டத்தை விரைவுபடுத்துங்கள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த மூன்று சட்டமன்ற கூட்டத்தொடரிலும் ஆட்சியாளர்கள் கூறினாலும் அதற்கான பூர்வாங்க பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் எடுத்து வருவதாக சொன்னீர்கள். அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேசுவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை.
அதேபோல், நகரத்தின் வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யாமல் பாதியில் நிற்கிறது. குறிப்பாக ரூ. ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரும் துறைமுகம் தனியாருக்கு தாரை வாக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் ரூ. 1260 கோடி இலாபம் ஈட்டியிருக்கக் கூடிய மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க நினைப்பதும், மின் கட்டணத்தை உயர்த்துவதும் ஏற்புடையதல்ல. மக்கள் நலன் கருதி அதனை பரிசீலனைச் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் ரூ. 50 கோடி செலவு செய்து ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்கினார்கள். இந்த ஆட்சியாளர்கள் ரூ. 250 கோடி செலவு செய்து பரீப்பெய்டு மீட்டர் வாங்கி உள்ளீர்கள். தனியாருக்கு கொடுக்க முடிவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீன் செய்வது நியாயமில்லை. ஆகவே, மின்துறை சம்பந்தமான நடவடிக்கையை மீண்டும் பரிசீலித்து அரசின் பணம் விரயமாவதை தடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/684ef23c-e0c.jpg)
ரேஷன் கடையே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளதை மாற்றி இந்த பட்ஜெட்டில் ரேஷன் கடை இயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சிறப்புக்கூறு திட்டத்தில் முழு பணத்தையும் செலவு செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அம்மக்களுக்கு அந்த பணம் செலவு செய்யப்படவில்லை. மடைமாற்றி விடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சமுதாய நலக்கூடம், கழிவறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்ததில்லை. கல்விக் கடன் வழங்குவதில்லை. நிலம் ஆர்ஜிதம் செய்து மனைப்பட்டா வழங்கவில்லை. தொடர் நோய் மருத்துவத்திற்கு பணம் தருவதில்லை.
இதுபோன்று மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளேன். முதல்வரும் அவரது பதிலில் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். துணைநிலை ஆளுநர் அவர்களும் ஜனநாயக முறையில் மக்களுக்கான திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையாக முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே. வருகின்ற பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. அது ஆட்சியாளர்களின் செயல்பாட்டில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“