மாநில அந்தஸ்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா; புதுச்சேரி சட்டசபையை கலைக்க வேண்டும் என சுயேச்சை எம்.எல்.ஏ வலியுறுத்தல்

சுயேச்சை எம்எல்ஏ நேரு, மாநிலத்திற்கான உரிமைகளை பெறுவதற்காகவும், குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், தற்போதைய சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, 2026 தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

சுயேச்சை எம்எல்ஏ நேரு, மாநிலத்திற்கான உரிமைகளை பெறுவதற்காகவும், குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், தற்போதைய சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, 2026 தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pondicherry

புதுச்சேரியில் இன்று தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தவும், 2026 தேர்தலை புறக்கணிக்கவும் சுயேச்சை எம்எல்ஏ நேரு என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி அரசு பல்வேறு மசோதாக்களை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது, "அதிகாரிகளிடம் கோப்புகள் தேங்கினால் நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்படும்" என்ற மசோதா. இந்த மசோதாக்கள் மக்களின் நலனுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும், அதில் உள்ள நிறை குறைகள் என்ன என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விவாதிக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சுமார் ஆறு மாத காலத்தில் வரவிருக்கும் நிலையில், அதற்குள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை முடிக்கவும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்த வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகளாக பின்வருவன முன்வைக்கப்பட்டுள்ளன:

குடிநீர் மற்றும் சுகாதாரம்: நகர மற்றும் புறநகர் பகுதிகளில் மாசடைந்த குடிநீர் விநியோகம், குப்பைகள் அகற்றப்படாதது, வாய்க்கால்களில் மலக்கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சனை.

Advertisment
Advertisements

மக்களுக்கான நலத்திட்டங்கள்: வீடுகட்டும் மானியம் கிடைக்காதது, கடந்த 2 மாதங்களாக ரேஷன் அரிசி வழங்கப்படாதது.

கல்வி: 2022 முதல் மாணவர்களுக்கு வழங்கப்படாத காமராஜர் கல்வி நிதியுதவி, 2023 முதல் 10% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்விக்கான அரசாணை வெளியிடாதது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.

pondy

வேலைவாய்ப்பு: அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, படித்த இளைஞர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படாதது, வாரிசு அடிப்படையில் வேலை வழங்காதது, ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்காதது, அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்காதது, காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்பாதது.

மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணம்: கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காதது, வரவிருக்கும் மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

மற்றவை: அடிக்கடி ஏற்படும் மின்தடை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரம், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் உள்ள குறைபாடுகள்.

மாநில அந்தஸ்து: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது தொடர்ந்து நடத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அப்படி இல்லாத பட்சத்தில், இன்று கூடும் இந்த சட்டமன்றத்தை இன்றோடு கலைத்துவிட்டு, 2026 தேர்தலுக்கு முன் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆளும் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர், எதிர்க்கட்சியினர் ஆகிய அனைவரும் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்துக்கான உரிமை கிடைக்கும் வரை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தியுள்ளார்.

அதுவரை குடியரசுத் தலைவரின் கீழ் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி, உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, இரண்டு அதிகார மையங்களாக இருந்து செயல்படாமல் இருக்கும் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை ஒற்றை மைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: