/indian-express-tamil/media/media_files/2025/03/27/yQ6GDaeG4qj9iB536JHm.jpg)
"இந்த 15–வது சட்டப்பேரவை அமைந்த பிறகு இரண்டாவது முறையாக மாநில தகுதி (அந்தஸ்து) வேண்டி தீர்மானத்தை இந்த அவையில் முன்மொழிந்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று திர்க் கட்சித் தலைவர் இரா. சிவா கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில தகுதி (அந்தஸ்து) கோரி சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சிவா தனிநபர் தீர்மானம் கொண்டுவந்து பேசியதாவது: –
இந்த 15–வது சட்டப்பேரவை அமைந்த பிறகு இரண்டாவது முறையாக மாநில தகுதி (அந்தஸ்து) வேண்டி தீர்மானத்தை இந்த அவையில் முன்மொழிந்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம் என்று அறிவிப்பு செய்து ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி அவர்கள் அரியணை ஏறி இரண்டு ஆண்டுகள் அதனைப்பற்றி துளிகூட பேசாமல் கிடப்பில் போட்ட நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாங்கள் தான் என்னவாயிற்று மாநில அந்தஸ்து என்று கேள்வி எழுப்பி இந்த அரசை அதை நோக்கி திருப்பினோம். அதன் விளைவாகத்தான் சென்ற 31.03.2023-ல் எங்களைப் போன்ற உறுப்பினர்கள் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்து அரசு அதனை தனது தீர்மானமாக நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.
அந்த நிலையில் அன்றைய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அவசியமில்லை என்றும் மாநில அந்தஸ்து கிடைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதை எல்லாம் நானே முன்னின்று பெற்றுக்கொடுப்பேன் என்றும் அரசின் எண்ணத்திற்கு எதிராக பேசி அத்தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்புவதில் தாமதப்படுத்தினார்கள்.
தீர்மானத்தின் மீது பேசிய முதல்வரும் இந்த தகுதியைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் இந்த அவையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதன் அடிப்படை காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்றியத்தில் இருக்கின்ற பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்–சின் சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற அரசு. ஆர்எஸ்எஸ்–ஐ பொறுத்தவரை அதிகாரம் என்பது ஒரே இடத்தில் குவிக்கப்பட வேண்டுமே தவிர பரவலாக்கப்படக் கூடாது என்பதாகும். இந்த நாட்டில் மாநிலங்கள் தொடர்வதைக்கூட ஆர்எஸ்எஸ் அனுமதிப்பதில்லை. வெறும் மாவட்டங்களை வைத்துக்கொண்டு டெல்லியால் அதிகாரம் செய்ய முடியும் என்ற கொள்கையுடையது ஆர்எஸ்எஸ்.
அதனால் தான் விடுதலைப் பெற்ற காலத்தில் இருந்து தனி மாநிலமாக விளங்கிய ஜம்மு காஷ்மீரை 370–ஐ காரணம் காட்டி மாநில தகுதியை பிடுங்கி இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டனர். ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை மிரட்டியும், செயல்படாமலும் முடக்கி வருகின்றனர். பலமுறை உச்சநீதிமன்றம் அரசியல் சட்டப்படி ஆளுநர்கள் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும். அவர்களுக்கான தனியான அதிகாரம் எதுவுமில்லை என்று அறிவித்து ஆளுநர்களின் தலையில் கொட்டு வைத்த பிறகும். மாநில அரசின் கோப்புகளை முடக்குவதும், செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதும் ஒன்றிய அரசின் அனுமதியோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஜிஎஸ்டி மூலம் பறித்ததும், ஜிஎஸ்டியில் இருந்து மாநில பங்கை தர மறுப்பதும் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பறித்ததும், நில அதிகாரத்தை பறித்ததுமான செயலபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முழு அதிகாரம் பெற்ற மாநிலங்களுக்கு இந்த நிலைமை என்றால் அதிகாரம் இல்லாத யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிலைப்பற்றி சொல்ல தேவையில்லை. ஒரு பக்கம் நம்மை ஆள்வதற்கு நாமே தேர்ந்தெடுக்கின்ற ஒர் அரசு. மறுபக்கம் நம்மை அதிகாரம் செலுத்தவிடாமல் தடுக்கின்ற ஒன்றிய உள்துறை.
இது எப்படி இருக்கிறது என்றால் இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தபோது உள்ளூர் மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதை போன்ற அரசு அமையவிட்டு சிறு, சிறு அதிகாரங்களை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, முழுமையான அதிகாரத்தை பிரட்டீஷ் அரசு தன்னிடம் வைத்துக் கொண்டது போல், நம்மையும் அரசமைக்கச் சொல்லிவிட்டு முழு அதிகாரத்தை ஒன்றிய அரசே வைத்துக்கொள்ளும் நிலை ஜனநாயகத்தை கேளிக்கூத்தாக்குகிறது.
மாநிலங்களுக்கான முழு உரிமை என்ற மாநில சுயாட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர் மூச்சான கொள்கையாகும். விடுதலைக்கு முன்பு திராவிட நாடு திராவிடர்க்கே என்ற முழக்கத்திலிருந்து திராவிட நாடு கொள்கையை கைவிட்டு, மாநில சுயாட்சி என்ற கொள்கையை பேரறிஞர் அண்ணா அவர்கள் கையிள் எடுத்தார்கள். அவரைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கழகத்தின் ஐந்து முழக்கங்களில் ஒன்றான மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பிரகடனப்படுத்தி அதற்காக ராஜமன்னார் குழு அமைத்து மாநில சுயாட்சியை நாட்டுக்கே பறைசாற்றினார்.
அவர் வழி வந்த இன்றைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில சுயாட்சியை முன்னெடுப்பதும், மாநிலத்திற்கான அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதும், இந்த ஆட்சியின் குறிக்கோள் என்று நாட்டிற்கே முன் உதாரணமாக விளங்கி வருகிறார். அதனுடைய அடுத்த வடிவம் தான் தொகுதி மறுசீரமைப்பில் எங்கள் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்று ஆறு மாநில முதல்வர்களையும், மாநில கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தி எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கர்ஜித்து இருக்கிறார்.
இந்த சூழலில் தான் உரிமையற்றவர்களாக இருக்கின்ற புதுச்சேரி யூனியன் பிரதேச இந்த பேரவை மாநில உரிமைக்காக இந்த தீர்மானத்தை இன்று முன்னெடுக்கிறது. நேற்றைய முன்தினம் சட்டமன்றத்தில் பேசிய நம்முடைய முதல்வர் தமிழ்நாட்டில் அந்த அரசு நினைத்ததை சாதிக்கிறது. புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலையைக் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்றால் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்துக்கிடந்து, அதிகாரிகளின் செயல்பாட்டை எதிர்பார்த்து பின்னடைவை சந்திக்கின்ற சூழல் பற்றி வருத்தப்பட்டார். இந்த ஆதங்கள் எல்லோருக்கும் உள்ளது.
இந்த மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட் அளவிற்கு ரூ. 12 ஆயிரம் கோடி கடன் நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதற்கான சிறப்பு நிதியை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்காக ஒன்றிய அரசு நிதி உதவி அளிக்கும் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறோம்.
நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைக்கச் சொல்லி கெஞ்சிகிறோம். நிதி பங்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தச் சொல்லி கேட்டுப்பார்த்தோம். சட்டமன்றம் கட்டப்படும் என்று எதிர்பார்த்தோம். துறைமுகங்களை இழந்துவிட்டோம். மின்வாரியத்தை தாரை வார்க்கிறோம். திட்டங்களை நிறைவேற்ற செயல்படுங்கள் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அவலங்கள் தொடர்வதற்கு காரணம் நம்முடைய முதல்வர் புலம்புவதைப்போல் மாநில தகுதி (அந்தஸ்து) இல்லாததே ஆகும்.
ஆகவே, நான்கு பிராந்தியங்களை கொண்டிருக்கின்ற, மூன்று மொழிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மக்களின் ஏகோமித்த ஆசை மாநில அந்தஸ்து. எவ்வித தியாகத்தையும் செய்து இதை பெறுவதற்கு நாம் தயாராகி இருக்கிறோம். மேலும் நம்மை ஒன்றிய அரசு சோதிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். இந்தியா விடுதலை பெற்றபொழுது நாம் பிரெஞ்ச் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களோடு ஒப்பிடும்போது பிரெஞ்சு அரசு நமக்கான உரிமைகளை கொடுத்தது. நம்முடைய குடிமக்களை பிரான்சிற்கு அழைத்து கல்வியும், வேலைவாய்ப்பையும், குடியுரிமையையும் கொடுத்தது.
ஆனால் விடுதலை இந்தியாவின் அரசு நம்மை கேட்டுக்கொண்டதால் பிரெஞ்சு அரசை உதரிவிட்டு இந்திய ஒன்றியத்தில் நம்மை இணைத்துக்கொண்டோம். அப்படிப்பட்ட நம்மை ஒன்றிய அரசு இன்றைக்கு உதாசீனப்படுத்துவது ஏற்க முடியாது. இது நமக்கு செய்யும் துரோகம் ஆகும்.
புதுச்சேரி மக்கள் வீரம் செறிந்தவர்கள். அன்றைக்கு புதுச்சேரியின் எல்லையான கீழுரில் விடுதலைக்கான கூட்டத்தை நடத்தி இந்திய அரசோடுதான் இணைவோம் என்று போர்க்குரல் எழுப்பியவர்கள் நாம். தொடர்ந்து 1960–ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு போர் தமிழகத்தை சூழ்ந்தபொழுது, புதுச்சேரியிலும் மொழிப்போரை நடத்தியவர்கள் நாம். தொடர்ந்து இந்த மண்ணை அண்டை மாநிலங்களோடு இணைக்க வேண்டும் என்று 1978–79 ஆண்டுகளில் ஒன்றிய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக இணைப்பு எதிர்ப்புபோர் நடத்தி இந்த மண்ணை காப்பாற்றியவர்கள் நாம். போராட்ட குணமிக்க புதுச்சேரி மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசு ஒன்றிய என்ஜினோடு பேசி இதற்கு வெற்றி தேடிக்கொடுங்கள். இரண்டு இடத்திலும் நாங்கள் தான் ஆளுகிறோம் என்று பாஜக காரர்கள் தொடர்ந்து மார்தட்டிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மண் நம்முடைய மண். இந்த மண்ணின் உரிமையை நாம் அனைவரும் இணைந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உணர்வு கட்சியை மீறி உங்களுக்கு வரவேண்டும். ஒருவேளை ஆட்சியை கலைத்துவி.ஐ போராட நீங்கள் தயாரானால் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். அந்த உணர்வோடு மாநில தகுதியை (அந்தஸ்து) ஏகமானதாக நிறைவேற்றவும், அரசு தீர்மானமாக முன்னெடுக்கவும் எனது வேண்டுகோளாக வைத்து அமர்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.