India - Puducherry Tamil News: மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:-
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு விசாரணையில் சிக்கியுள்ள ஜனாஸ் ராஃபி (எ) ஜான்சிக்கு சட்டத்துறைச் சார்பு செயலர் பதவி உயர்வு வழங்கியுள்ள தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரி சட்டத்துறையில் சட்ட அதிகாரியாக இருப்பவர் ஜனாஸ் ராஃபி (எ) ஜான்சி. இவர் புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கும் விடுதி கட்டியுள்ளார். அரசு ஊழியர்கள் சொத்து வாங்கினாலோ அல்லது விற்றாலோ அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி தொடர்புடைய துறைகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது அனுமதிப் பெற வேண்டும். ஆனால், இவர் அவ்வாறு செய்யாமல் அரசு ஊழியர் நடத்தை விதியை மீறியுள்ளார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வாங்கிக் குவித்துள்ளார்.
இதுகுறித்துப் பத்திரப் பதிவுத் துறை ஆவணத்துடன் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான (Chief Vigilance Officer) தலைமைச் செயலரிடம் பலமுறைப் புகார்கள் அளித்தோம். அப்புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக விதியை மீறிய மேற்சொன்ன அதிகாரியை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்.
மேலும், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வாங்கிய நான்கு மனைகள் குறித்தும் பத்திரப் பதிவுத்துறை ஆவணங்களுடன் மீண்டும் புகார் அளித்தோம். அதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner) ஆகியோருக்குப் புகார்கள் அனுப்பினோம். பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய புகார்கள் புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோல், மத்திய கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பிய புகார் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளனர். தற்போது இவ்விசாரணைகள் நிலுவையில் உள்ளன. மேலும், சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பிய இரண்டு புகார்கள் மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மேற்சொன்ன ஜனாஸ் ராஃபி (எ) ஜான்சிக்கு சட்டத்துறைச் சார்புச் செயலர் பதவி உயர்வு அளித்து உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தலைமைச் செயலர் உள்ளார் என்பது வெட்கக்கேடானது.
பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் ஆகியோர் அனுப்பிய புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல், விதிகளை மீறிய குற்றமிழைத்த சட்டத்துறை அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கியுள்ளது தலைமைச் செயலரின் உச்சபட்ட அதிகார வரம்புமீறல் ஆகும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு விசாரணையில் சிக்கியுள்ள ஜனாஸ் ராஃபி (எ) ஜான்சிக்கு சட்டத்துறைச் சார்பு செயலர் பதவி வழங்கியுள்ள தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மேலும், மேற்சொன்ன அதிகாரியை அப்பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம் என அரசை எச்சரிக்கின்றோம்.
இவ்வாறு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.