பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை 11.30 மணிக்கு தனது கார் மூலம் சட்டமன்றத்திற்கு வந்தார். ஏற்கனவே அவரை சந்திக்க கோர்க்காடு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தவமணி மற்றும் அவரது தம்பி மாசிலாமணி நின்றிருந்தனர். முதலமைச்சர் காரை விட்டு இறங்கியவுடன் அந்தப் பெண் கதறி அழுது கொண்டே காலை பிடித்துக் கொண்டார். அதே நேரத்தில் மாசிலாமணி தன் கையில் இருந்த பெட்ரோல் எடுத்து மேலே ஊற்றிக் கொண்டார். இதில் சில துளிகள் முதலமைச்சரின் காலிலும் பட்டது.
இந்த நேரத்தில் மூதாட்டி தனது சொத்துக்களை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தையும் சொத்தையும் காப்பாற்றும் படி கதறி அழுதார். அவர் சத்தம் கடுமையாக எழுந்து தொடர்ந்து போலீசார் மற்றும் சட்டமன்ற காவலர்கள் உள்ளே ஓடி வந்து சூழலைப் பார்த்து பெட்ரோல் ஊற்றிய நபரை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் முதலமைச்சரின் காலை பிடித்து இருந்த பெண்ணை பெண் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கொண்டு வந்தனர். சட்டமன்ற வாசலில் வைத்து அவர்களை விசாரித்த போது, தவமணியின் ஒன்றை ஏக்கர் நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தனது குடும்பத்தாரை கும்பல் ஒன்று தாக்கி வருவதாக புகார் தெரிவித்தார்.
இந்த புகார்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன், ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அரைமணி நேரத்திற்கு புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் கடும் பதற்றம் நீடித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil