/indian-express-tamil/media/media_files/2025/02/12/IG5HHAK3nWRSQ8gAvdDN.jpg)
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி பா.ஜ.க மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை ஐந்தாவது கூட்டத்தொடரில் இரண்டாம் பகுதி இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஆளுங்கட்சியின் ஆதரவு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், ஜான் குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், மற்றும் பா.ஜ.க ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான சிவசங்கரன், அங்காளன், கொல்லப்பள்ளி அசோக், ஆகிய 6 பேரும் திடீரென சட்ட மன்றத்தின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய மதுபான தொழிற்சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், "புதுச்சேரியில் மக்களை பாதிக்கின்ற வகையில் கொண்டுவரப்பட உள்ள புதிய மதுபான திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி முதல்வர் கவர்னர் ஆகியோருக்கும் மனு அளித்தோம். ஆனாலும் அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினர்.
மேலும், பீஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கண் துடைப்பிற்காக சட்டமன்ற கூட்டத்தை கூட்டாமல் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் மீண்டும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள சட்டசபை உள்ளே கோஷங்களை எழுப்பியவாறு சென்று கூட்டத்திலும் பங்கேற்றனர். கடந்த சில மாதங்களாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அணியாக தர்ணாவில் ஈடுபட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க - காங்கிரஸ் வெளிநடப்பு
சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்ற தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த ஆட்சியில் கடந்த நான்கு வருடமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கம், புதிய ரயில்வே பாதைகள், துறைமுக விரிவாக்கம்,புதிய தொழில் கொள்கை மற்றும் ஐ.டி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அவசரக் கதியில் நிறைவேற்றப்பட்டதால் கடந்த வாரம் நடைபெற்ற மாதிரி தேர்வில் 95 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்,புயல் நிவாரணமாக 760 கோடி ரூபாய் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கி உள்ளது என்ற விபரம் இல்லை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என கேட்டுக்கொண்ட சிவா மத்திய அரசு பட்ஜெட்டில் புதுச்சேரி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் அளவுக்கு அதிகமாக டெஸ்டோபார் மற்றும் மதுபான கடைகள் இருப்பதால் புதிய மதுபான தொழிற்சாலைகள் தேவையில்லை என்பதுதான் திமுக நிலைபாடு இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும் சிவா தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.