பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
வில்லியனுார் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்த ஆசிரியர் ரங்கசாமி மகன் செந்தில்குமரன் (45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் நெருங்கிய உறவினரான இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ., கட்சியில் இணைந்தார். தற்போது மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 9:40 மணி அளவில் வில்லியனுார் – விழுப்புரம் சாலை கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஹரிகரன் பேக்கரியில் நின்று கொண்டு டீ சாப்பிட்டவாறு பா.ஜ.க விவசாய அணி நிர்வாகியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 3 பைக்கில் முகத்தில் மாஸ்க்கு அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமரன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி உள்ளனர். புகைமண்டலத்தில் மயங்கி விழுந்த செந்தில்குமரன் தலையில் கத்தியால் சராசரியாக வெட்டி சிதைத்துவிட்டு இறந்ததை உறுதிசெய்தபின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பா.ஜ.க பிரமுகர் செந்தில்குமரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கும்பலாக கூடினர். சம்பவ இடத்திற்கு ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி. நாரா சைய்தன்யா, எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், பக்தவச்சலவம், இன்ஸ்பெக்டர்கள் வேலையன், ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் செந்தில்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமரனுக்கு புனிதா என்ற மனைவியும் கனிஷ்கா (17) என்ற மகளும் கிஷன்குமார் (16) என்ற மகனும் உள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் சிசிடிவி வீடியோ காட்சி ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மங்களம் தொகுதி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமரன் வில்லியனூர் பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏ-வும் புதுச்சேரி உள்துறை அமைச்சருமான நமசிவாயம் செந்தில்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இந்நிலையில், வில்லியனுாரில் வெடிகுண்டு வீசி மங்கலம் தொகுதி பா.ஜ.க செந்தில் குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil