புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை கூட்டம், நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, "மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை கவர்னருக்கு அனுப்ப உள்ளோம். இதன் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 37 எம்.பி.பி.எஸ் சீட்டுகள், 11 பி.டி.எஸ் சீட்டுகள் மற்றும் 4 பி.ஏ.எம்.எஸ் சீட்டுகள் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
தற்போது அமைச்சரவை அனுப்பியுள்ள பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனடிப்படையில் இம்முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு உறுதியாக கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் ஒரு பக்கம் மதுபானக் கடைகள் அதிகமாக திறக்கப்படுகிறது. மறுபக்கம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறதே என்று கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்பது முதலில் இருந்தே அமலில்தான் உள்ளது. விபத்துகள் அதிகரிக்கும்போது போலீசார் கவனிப்பார்கள், கண்காணிப்பார்கள். சுற்றுலா பயணிகள் அதிகப்படியானோர் வர வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
புதுச்சேரி அழகான கடற்கரை கொண்ட அமைதியான மாநிலம். சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது ஊக்குவிக்கப்படும். முன்பு 3 லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு மதுபானக் கடை இருந்தது. தற்போது 14 லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு உள்ளது என்பதை ஒப்பிட்டு பாருங்கள், விகிதாச்சாரம் தெரிந்துவிடும்" என்று கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”