scorecardresearch

பிரான்ஸ் அரசின் செவாலியே விருது பெற்ற புதுவை பேராசிரியை மரணம்

பிரான்ஸ் அரசின் மதிப்புமிக்க செவாலியே விருது பெற்ற புதுவை பேராசிரியை மதன கல்யாணி (84) காலமானார்.

Puducherry: chevalier awardee madana kalyani died Tamil News
chevalier awardee madana kalyani died in Puducherry Tamil News

பாபு ராஜேந்திரன்

புதுச்சேரி: பிரான்ஸ் அரசின் மதிப்புமிக்க செவாலியே மற்றும் ஒப்பிசம் விருதுகளை புதுவையில் பெற்ற முதல் பெண்மணி மதன கல்யாணி (84) காலமானார். இவர் புதுவையில் பிரெஞ்சு அரசால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்லூரியான லிசே பிரான்ஸேயில் தமிழ்ப் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றியவர். அத்துடன்எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். 2009-ல் புதுவை அரசு கலைமாமணி விருது வழங்கி இவரை கவுரவித்தது. 2002-ல் ஷெவாலியே விருது கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரசின் மேலும் ஒரு உயரிய விருதான ஒப்பிஸியே விருது 2011-ல் கிடைத்தது.இந்த விருதுகளை தமிழகம் புதுவையில் முதலில் பெற்ற பெண்மணி மதன கல்யாணி ஆவார். இவர் நோபெல் பரிசு பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் ஆல்பெர் காம்யு எழுதிய ‘லா பெஸ்த்’ நாவலை ‘கொள்ளை நோய்’ என்ற தலைப்பிலும், பிரெஞ்சு நாவலாசிரியர் பல்சாக் படைப்பான ‘லு பெர் கொர்யோ’ என்ற நாவலை ‘தந்தை கொரியோ’ என்ற தலைப்பிலும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

எழுத்தாளர் சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். புதுவை நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் 200 பாடல்களைத் தொகுத்து தமிழ், பிரெஞ்ச் ஆகிய 2 மொழிகளிலும் வெளியிட்டிருக்கிறார். இவரது ‘புதுவை நாட்டுப்புறக் கதைகள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை பிரான்ஸின் புகழ்வாய்ந்த பதிப்பகமான கர்த்தாலா வெளியிட்டது. பிரெஞ்சு அறிந்த சிறுவர்களுக்காக சிலப்பதிகார நூலின் சுருக்கத்தைப் படங்களுடன் வெளி யிட்டார்.

கோதலூப், மொரீசியஸ், ரீயூனியன் தீவுகளில் பிரெஞ்சு பேசும் தமிழ்மொழி அறியாத தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் மாரியம்மன் தாலாட்டு, மதுரைவீரன் அலங்காரச் சிந்து முதலியவற்றை இசையோடு ஆனால் பொருள் தெரியாமல் பாடினார்கள். அவர்களுக்காக பிரெஞ்சு மொழியில் 2 நூல்களை எழுதியுள்ளார்.

பிரெஞ்சு கவிதைகளைத் தமிழில் ‘தூறல்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry chevalier awardee madana kalyani died tamil news