/indian-express-tamil/media/media_files/2024/12/02/lFVHIKKxTvzVRN30hpgk.jpg)
Puducherry Chief minister N Rangaswamy: துணைநிலை ஆளுநர் மீது அதிருப்தியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் ஈடுபட்ட நிலையில், முதல்வருக்கும் தனக்கும் மோதல் இருப்பதாக தெரியவில்லை என துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சரவை அனுப்பவும் கோப்புகளுக்கு அனுமதி தராமல், காலம் கடத்துவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாக துணைநிலை ஆளுநர் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால், துணைநிலை ஆளுநர் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். மேலும், அரசுக்கு அதிகாரம் இல்லாத பதவி எதற்கு என்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
அத்துடன், முதலமைச்சர் ரங்கசாமி கடந்த இரண்டு தினங்களாக சட்டசபைக்கு வராமல் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை.
இந்த நிலையில், இன்று புதுச்சேரிக்கு வருகை புரிந்த புதுச்சேரி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மீண்டும் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரங்கசாமி, "இன்று நடந்தது வழக்கமான சந்திப்பு தான். நிர்வாகத்தில் சில பிரச்னை வரும். அவை பேசி தீர்க்கப்படும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி மாநில அந்துஸ்து பெற வலியுறுத்துவோம். மாநில அந்துஸ்து கிடைக்கும் வரை எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் சில பிரச்னைகள் வரும். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. 2026 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் முதல்வருடன் மோதலா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர், 'அப்படி எதுவும் தோன்றவில்லை' எனக் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.