ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி, பணிக்கு வராத அரசு ஊழியர்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
சிலர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய துறைக்கு செல்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் உண்டு. எனவே அரசு துறைகள் முழுவதுமாக பட்டியலை திரட்டி ஒப்படைக்க நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.