புதுச்சேரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் 1வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் 1000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக புதுச்சேரி முதலமைச்சர் உயர்த்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களில் பயன்பெற தற்போதுள்ள வருவாய் வரம்பு ரூ. 2.00 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்தி கடந்த 10.03.2025 அன்று ஆணை பிறப்பித்து இந்த அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வைப்புத் தொகை (Retention Scholarship) ரூ.1000 -லிருந்து ரூ.5,000ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ரூ.1,500லிருந்து ரூ.5,000ஆகவும், 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.8,000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் தொடர்புடைய இந்தியாவில் உள்ள நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் பட்டியல் இன மக்கள் யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி வழங்க "அம்பேத்கர் யாத்ரா" என்னும் புதிய திட்டத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாக்பூரிலுள்ள தீக்சை பூமி, மும்பையிலுள்ள சைத்ய பூமி, மத்திய பிரதேசத்திலுள்ள பீம் ஜன்ம பூமி மற்றும் புது டெல்லியிலுள்ள மகாபரினிவாரன் பூமி ஆகிய தலங்களுக்கு 9 நாட்கள் கால கெடுவிற்குள் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் யாத்திரை மேற்கொள்ளப்படும்.
இதனால் அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடைவர்கள். இந்த யாத்திரையை ஒருங்கிணைக்க ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அலுவலர்கள் இருவர் நியமிக்கப்படுவார்கள். புதிதாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ந. ரங்கசாமியிடம் காண்பித்து திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துப் பெற்றார்.
இந்தச் சந்திப்பின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆ. இளங்கோவன் உடனிருந்தார். 2024-25ஆம் ஆண்டு மட்டும் ரூ.75.00 கோடிக்கு மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனையாகும். மேலும், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் ஆதிதிராவிடர் நலத்துறை நிதியை முழுமையாக செலவு செய்வதில் தனிக்கவனம் செலுத்தி 95 விழுக்காட்டிற்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு அதிகபட்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அட்டவணை இன மற்றும் பழங்குடியினர் நலன்களுக்காக நிதியை ரூ.98.75 விழுக்காடு பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.