பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரியில் பேனர் வைத்தால் புகாரளிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணை இரண்டு வாரத்திலேயே திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் வருவதால் அவரது ஆதரவாளர்கள் பேனர் வைக்கத் தொடங்கியுள்ளது தான் இம்முடிவுக்கு காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பொது இடங்களில் சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகள், கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி, பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,பொது இடங்களில் சட்டவிரோத பதாகைகள் வைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதாகை வைப்பவர் தனி நபராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் 94433 83418 என்ற எண்ணில் பேனர்களை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என சப் கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சப்-கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்தது. இந்நிலையில் சப்-கலெக்டர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘பேனருக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தர தெரிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண் நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுகிறது. இந்த எண்ணுக்கு புகார் அனுப்பவேண்டாம். குறைகள், புகார்களை சமர்பிக்க மற்ற அனைத்து வழிகளும் வழக்கம்போல் செயல்படும்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் வருவதால் அவரது ஆதரவாளர்கள் பேனர் வைக்கத் தொடங்கியுள்ளது தான் இந்த முடிவுக்கு காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“