பாண்லே நிறுவனம் புதுச்சேரியில் செயல்படும் 19 மகளிர் பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட 103 பிரதம பால் கூட்டுறவு சங்கங்களின் மத்திய சங்கமாக செயல்படுகிறது. தற்போது, ஏறக்குறைய 8,400 பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பால் கூட்டுறவு சங்கங்களில் நிறுவப்பட்டுள்ள 30 பால் குளிரூட்டும் மையங்கள் வாயிலாக தினமும் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாண்லே நிறுவனம் கறவை மாடுகளுக்கான தீவனம், செயற்கை முறை கருவூட்டல், நோய்தடுப்பு பணிகள், கறவை மாடு வழங்குதல் போன்ற பணிகளுடன் கூட்டுறவு மேம்பாடு சார்ந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசால் வழங்கப்படும் 75 சதவிகித மாட்டுத்தீவன மானியம் பாண்லே நிறுவனம் வாயிலாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. IVF எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பசுக்களிடம் கருமுட்டைகளை செலுத்தி அதிக பால் உற்பத்தி கொடுக்கக்கூடிய கிடாரி கன்றுகளை பெறும் திட்டம் புதுவை அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய பால்வள வாரியத்தின் பங்கேற்புடன் பாண்லே நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்வாயிலாக, வரும் காலங்களில் பால் உற்பத்தி அதிகரிக்கக்கூடும்.
மாதமொன்றுக்கு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பால் பணப்பட்டுவாடா செய்யப்படுவதன் வாயிலாக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் சமூக பொருளாதார நிலை உயர்வுக்கு வழிவகை செய்யப்படுகிறது. இவ்வாறான பணப்புழக்கம் ஊரக பகுதியில் வசிக்கும் மகளிர் அதிகாரம் பெற்றிடவும் வழிவகை செய்கிறது. நுகர்வோருக்கு பால் விற்பனை செய்வது மட்டுமின்றி பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களான நெய், பால்கோவா, தயிர், மோர், நறுமணப்பால், பணீர், குல்பி, கசாட்டா உள்ளிட்ட ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் பிரட் போன்றவையும் பாண்லே நிறுவனம் தரமாக உற்பத்தி செய்து நியாயமான விலையில் நுகர்வோருக்கும், சுற்றுலா பயனிகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/9e1b2457-5f6.jpg)
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையத்துடன் செய்துகொண்ட ஒரு நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல் பிராண்ட் ஐஸ்கிரீம் உட்பட தற்போது தினமும் 10,000 லிட்டர் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுவருகிறது. இதனை 20,000 லிட்டராக அதிகரிக்கும் நோக்கிலும் கோன் ஐஸ்கிரீம் உற்பத்தியினை தொடங்கிடவும் விரைவாக கெட்டிப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தும் வகையிலும், புதிய 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் ரூ.3435.31 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் தலைமையில் இன்று (23.05.2025) நடைபெற்றது. இவ்விழாவில், புதிய 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் முதல்வர் ரங்கசாமி.
/indian-express-tamil/media/post_attachments/b3ced72f-bf9.jpg)
இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், தேசிய பால்வள வாரியத்தின் தலைவர் டாக்டர் மீனேஷ் ஜா, தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், அரசுச் செயலர் (கூட்டுறவு) ஜெயந்த் குமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா, பாண்லே மேலாண் இயக்குநர் ஜோதிராஜூ, பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பாண்லே பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.