பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கிய சூழலில் கடந்த மார்ச் மாதம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக உலா வருகிறார். தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா அவருக்கு ஒதுக்கப்படவில்லை.
சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஒன்று கூடி பேசினர். அதையடுத்து, மாநிலங்களவை எம்,பி-யும் மாநிலத் தலைவருமான செல்வகணபதியிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும், வாரியத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லாவிட்டால், சட்டப்பேரவையில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால், முதல்வர் ரங்கசாமி அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“