புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் குறித்தான பதில் உரைகளும் இடம்பெற்றன. அவ்வப்போது முதலமைச்சர் ரங்கசாமியும் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்றைய கூட்டத்தொடர் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர் கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது, அவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளம் உயர்த்தி 18,000 ரூபாயாக வழங்கப்படும் என்றார்.
தேசிய நலவாழ்வு திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 15,000 ரூபாயும், டெக்னீசியன்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.
சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டும், அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம், கூட்டுறவு நிறுவனங்களும் தற்போது மேம்பட்டு வருகிறது, லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையும் உடனடியாக திறக்கப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.