/indian-express-tamil/media/media_files/2025/03/19/aOSiYzpE2ZHqUqLe8xEq.jpeg)
புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 7 வது நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதன்படி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் இனி வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதேபோல் நகரப் பகுதியில் உள்ள உருளையான்பேட்டை மற்றும் உப்பளம் தொகுதிக்குட்பட்ட 7-பகுதிகளில் தண்ணீரில் உவர்ப்புத் தன்மை அதிகப்படியாக உள்ளதால் வரும் தமிழ் புத்தாண்டு முதல் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நாள்தோறும் 20 லிட்டர் வாட்டர் கேன்கள் இலவசமாக வழங்கப்படும் என பொதுப்பணித்துறை லட்சுமிநாராயணன் அறிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டதால் நான்கு மாதங்களாக எரிவாயு சிலிண்டர் மானியம் வழங்க முடியவில்லை. தற்போது அக்டோபர் 25-ம் தேதி முதல் ஜனவரி 25 வரை எரிவாயு சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியமாக மஞ்சள் நிற அட்டைக்கு ரூபாய் 150 மற்றும் சிவப்பு நிற அட்டைக்கு ரூபாய் 300 இன்று முதல் செலுத்தப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.