புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "அரசு பொறுப்பேற்ற பிறகு வருமானம் உயர்ந்துள்ளது. தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது.15 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் குஜராத் செல்கிறார். அங்கு பிரதமரை சந்தித்து கூடுதல் நிதி, கடன் தள்ளுபடி கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார்.
அரசு துறைகளில் 10,000 காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். இது வரை 3000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தண்ணீரை அதிகம் பயன்படுத்தாத சுற்றுச்சுழல் வகையில் பாட்டிலிங் மதுபான தொழிற்சாலைகளுக்கு தடை இல்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 5000 பெண்களுக்கு வேலை கிடைக்கும். 500 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் கிடைக்கும். வெளியில் தவறுதலாக விமர்சனம் செய்கிறார்கள். மதுவிலக்கு என்ற முடிவை எடுக்க முடியுமா? என்றால், அது முடியாது.
பூரண மதுவிலக்கு என்றால், நான்தான் முதலில் ஆதரவு தெரிவிப்பேன். ஆனால் அது முடியாது. மதுபான தொழிற்சாலைகள் வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. புதுச்சேரிக்கு வருமானம் கிடைக்கிறது. அரசு பல சங்கடங்களும் தடைகள் இருந்தாலும் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தும். அரசின் கோப்புகளை விரைந்து அனுப்ப வேண்டும். எதிர்மறையான சிந்தனையோடு அதிகாரிகள் செயல்பட கூடாது" என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.