புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாஜிம், செந்தில்குமார், அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ-வான நேரு ஆகியோர் தனி உறுப்பினர் தீர்மானங்களை பேரவையில் இன்று கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்; அதை பெற்றே தீர வேண்டும். இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை டெல்லிக்கே சென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைப்போம். மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம். அதற்காக இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார். இந்தத் தீர்மானம் பேரவையில் 15 ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“