புதுவை நிர்வாகத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுவையில் 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,328 கோடியை வழங்க வேண்டும்; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்கவேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுவை நிர்வாகத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசு 16-வது நிதிக்குழுவை அமைக்க உள்ளது. இந்த நிதிக்குழுவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்க்க வேண்டும்.
புதுவையில் 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடியை வழங்கவேண்டும். ஏற்கனவே நாடாளுமன்ற நிலைக்குழு சட்டமன்றம் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநிலங்களைப்போல் நிதி வழங்க பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு 100 சதவீத நிதியையும் வழங்கவேண்டும். அப்படி செய்தால் புதுவையின் நிதிச்சுமை குறையும் என்றார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil