புதுச்சேரி கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண் விவசாயிகள் நலத்துறை சார்பில் விவசாயக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள வில்லியனுாரில் நடந்தது. இந்த விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில், 'இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுபட்ட இலவச அரிசிக்கான பணம் மற்றும் சிலிண்டர் மானியம் ஆகியவை விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண தொகை, வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ரங்கசாமி 'அரசு பள்ளிகளில் படித்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு தற்போது செலுத்தி வரும் நிலையில், கூடுதலாக வரும் கல்வி ஆண்டு முதல் விடுதி மற்றும் உணவு கட்டணத்தையும் அரசே செலுத்தும். காமராஜர் கல்வீடு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கல்வீடு கட்டுவதற்கு மானிய தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்' என்று அவர் கூறினார்.