பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிடி ஆயோக் கூட்டம் இன்று நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அமைப்பு கடிதம் அனுப்பியது.
கடந்த வருடங்களில் முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக நிதி ஆயோக் கூட்டங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்ற நிலையில், இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதேபோல் டெல்லியில் ஏற்கெனவே நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்காமல் இருந்தார்.
இம்முறை மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அமைப்பு கடிதம் அனுப்பி இருந்ததால், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியே பங்கேற்பார். அப்படியே பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்த பிறகு, ஆளும் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
குறிப்பாக பா.ஜ.க அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து முறையிட முகாமிட்டு இருந்தனர். ஆனால், நாடாளுமன்ற கூட்ட தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிசியாக இருந்ததால் ஏமாற்றத்துடன் புதுச்சேரி திரும்பினர். இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“