புதுவை சுற்றுலா மேம்பாட்டு திட்ட அர்ப்பணிப்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
சுற்றுலாவை மேம்படுத்த புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்துள்ளது. மேலும் நிதி வழங்க ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதுவை சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய சிறிய மாநிலம். புதுவை சுற்றுலா வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. சொந்த நிதி ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. புதுவைக்கு வணிகத்துறை, கலால்துறை, பத்திரப்பதிவு துறைகள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இதுதவிர சுற்றுலா வளர்ச்சியின் மூலம் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு நிதியை முறையாக செலவிட்டு, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் சில நடைமுறை சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது.
அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. சிலவற்றை தளர்த்தி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. எதை விரைவாக செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்.
நிலத்தை தனியாருக்கு வழங்க வேண்டும் என்றால் எத்தனை ஆண்டு வழங்க வேண்டும்? என்பதில் பல கேள்விகள் எழுகிறது. இதை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளோம். தனியார் பங்கீடு சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தேவையான லாபம் ஈட்டுவது அவசியம். முதலீடு செய்பவர்கள் லாபம் ஈட்ட நினைக்கின்றனர். சிலவிதிகளை தளர்த்தினால் அவர்கள் முதலீடு செய்ய புதுவைக்கு வருவார்கள் என்பது உண்மை.
வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம். நிர்வாகத்தில் சிறு, சிறு தடங்கல், காலதாமதம் ஏற்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்ட தேடலில் புதுவை முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரியது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். நட்சத்திர விடுதிகள் தேவை உள்ளது. இதற்கு அனுமதி கொடுப்பதில் சிக்கல் உள்ளது.
புதுவையில் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை இருந்தால்தான் முதலீடு செய்ய வருவார்கள். பலர் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர். இந்நிலை மாறினால் புதுவையின் சுற்றுலா வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். புதுவையை சிங்கப்பூர்போல மாற்ற முடியும். புதுவையில் விரைவான வளர்ச்சி வர வேண்டும். அதிகாரிகள் இதற்கேற்ப செயல்பட வேண்டும்.
மழை பெய்து வருவதால் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறவில்லை. 12 ஆண்டுக்கு பின் அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது. ஓராண்டில் இந்த பணிகள் முடிவடையும். மத்திய அமைச்சர் மிகுந்த அக்கறையோடு கல்வி, மருத்துவ சுற்றுலா மீது கவனம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். அவர்களின் எண்ணப்படி வேகமான வளர்ச்சியை புதுவையில் கொண்டுவர வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். முதலீட்டாளர்கள் அவசியம் வரவேண்டும். அவர்களுக்கு தேவையான வளர்ச்சியை அரசு செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"