வயது வரம்பில் தளர்வு அளிக்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை; ரங்கசாமி வேதனை

வயது வரம்பில் தளர்வு கொடுக்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வயது வரம்பில் தளர்வு கொடுக்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

author-image
WebDesk
New Update
puducherry rangasamy eb

புதுச்சேரி அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வயது வரம்பில் தளர்வு அளிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி மின்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 73 இளநிலை பொறியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு 73 இளநிலை பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையில் ஒன்றாகும். மின்தடை ஏற்படும் போது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். மின்தடைக்கு முக்கிய காரணம், போதிய பொறியாளர்கள் இல்லாததே. குஜராத் போன்ற பெரிய மாநிலங்களுக்கு நிகராக புதுச்சேரியில் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது.

134 இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்களில் தற்போது 73 மட்டும் நிரப்பப்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. புதுவையில் நகரமயமாதல் அதிகரித்து வருகிறது. மின்துறையில் எவ்வளவு பொறியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு காலத்தோடு பணியிடங்கள் நிரப்பியிருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

தவளக்குப்பம், லாஸ்பேட்டை, மரப்பாலம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்தாலே மின்தடை பிரச்சினையை சீர் செய்ய முடியும். இந்த பணிகளை நிறைவு செய்தாலே ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் மின்தடை இல்லாத நிலையை ஏற்படுத்தலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசுத் துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் வயது மூப்பின் காரணமாக படித்த இளைஞர்கள் பலரது அரசு வேலை கனவு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு வேலை கிடைக்காமல் போகுமோ? என்ற ஏக்கம் அவர்களிடம் உள்ளது.

வயது வரம்பில் தளர்வு கொடுக்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சில சமயத்தில் நிர்வாகத்தில் வயது தளர்வு அளித்தால் படித்தவர்கள் பலர் பயனடைவார்கள். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில் ”புதுச்சேரி மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம்.

தேசிய அளவில் தனிநபர் ஒருவர் ஆண்டு ஒன்றுக்கு 700 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் ஒருவர் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 500 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

விழாவில் தலைமை செயலர் சரத் சவுகான், கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் நன்றி கூறினார்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Puducherry N Rangasamy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: