/indian-express-tamil/media/media_files/2025/03/17/cACY9xlEZMIGBFWCxZho.jpg)
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் நிலையில், அனைவருக்கும் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி திம்மநாயக்கன்பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 318 நபர்களுக்கு இலவச மனைப்பட்டாவாக வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கனார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் காமராஜர் பெயரில் கல்வீடு கற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி 90% மக்களுக்கு கல்வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் தேவைகளை உணர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்காக சிறப்பு கூறு நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி இடம் என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் அரசு செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று குறிப்பிட்ட ரங்கசாமி.. அரசு துறையில் இதுவரை 5 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்பட்ட தொகை ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அனைவருக்கும் வீடு என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்.தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், அனைவருக்கும் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
முதியோர் உதவி தொகை பெற புதிதாக விண்ணப்பித்த பத்தாயிரம் பேருக்கு அடுத்த வாரம் முதல் உதவி தொகை வழங்கப்படும் என்று தெரிவித்த அவர். வீடுகள் இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்கு 600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது அடுத்த வரும் மாதங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ,செந்தில்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.