/indian-express-tamil/media/media_files/2025/10/05/whatsapp-image-2025-2025-10-05-14-06-16.jpeg)
Puducherry
புதுச்சேரி: மத்திய சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற சளி மற்றும் இருமல் சிரப்பை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
9 குழந்தைகளின் உயிரைக் குடித்த மருந்து
சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிஃப் ('Coldrif' Batch No. SR13) சளி சிரப்பைக் குடித்த 7 குழந்தைகளும், அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் 2 குழந்தைகளும் என மொத்தம் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், இந்தக் குறிப்பிட்ட சளி சிரப்பில் நச்சுத்தன்மை (Toxicity) அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தானிலும் அதே மருந்தை உட்கொண்ட குழந்தைகளின் உடற்கூறு ஆய்விலும் நச்சுத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தடை! புதுச்சேரியில் விற்பனை!
இதன் விளைவாக, மத்திய சுகாதாரத் துறை, கோல்ட்ரிஃப் மருந்தை (Coldrif Batch No. SR13) தயாரித்த ஸ்ரீபெரும்புத்தூரில் இயங்கும் ஸ்ரீசன் (Sresan) பார்மசி கம்பெனி மற்றும் அந்த மருந்து இரண்டையும் உடனடியாகத் தடை செய்தது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை இந்தத் தடையை உறுதி செய்துள்ளன.
இருப்பினும், இவ்வாறு தடை செய்யப்பட்ட அந்த சளி சிரப், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தமிழக சுகாதாரத் துறை மூலம் கடந்த அக்டோபர் 1 அன்று புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில், அசோசியேஷன் தலைவர் பாலா கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மொத்த மருந்து கொள்முதல் நிலையங்கள், மருத்துவமனைகள், மற்றும் மருந்துக் கடைகளில் உள்ள உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கோல்ட்ரிஃப் மருந்தை உடனடியாக விற்பனை செய்யத் தடை செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநில மருத்துவக் கட்டுப்பாட்டுத் துறை உடனடியாகச் செயல்பட்டு, மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து கோல்ட்ரிஃப் மருந்துப் பெட்டிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த நச்சு மருந்தைத் தயாரித்த நிறுவனம் மீது உரிய மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, உயிர் பலி வாங்கி மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்து புதுச்சேரியில் விற்கப்படுவது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலன் கருதி, கவர்னர் மற்றும் முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உயிருக்கு ஆபத்தான இந்த மருந்தை மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us