/indian-express-tamil/media/media_files/2025/06/28/puducherry-communist-party-of-india-condemn-bjp-tamil-news-2025-06-28-16-27-25.jpg)
பதவி சண்டை, அதிகார பசியால் பா.ஜ.க அலைந்து கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பதவி சண்டை, அதிகார பசியால் பா.ஜ.க அலைந்து கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அப்போது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம். இரட்டை என்ஜின் ஆட்சியில் பலன் கிடைக்கும். நிதி நெருக்கடி தீர்க்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார்கள்.
என். ரங்கசாமி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதன் மூலமாக மாநில தகுதி கிடைக்கும் என்று உறுதி அளித்தார். ஆனால், இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. மாநிலத் தகுதியும் கிடைக்கவில்லை. மாறாக பா.ஜ.க கூடாரத்தில் குழப்பமும், சண்டையும் தான் ஏற்பட்டு இருக்கிறது. அதன் விளைவு தான் இப்போது பா.ஜ.க அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா நாடகம் அரங்கேறி இருக்கிறது.
நியமன எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்களும் உடனடியாக பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புதிய நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்படுவதும், புதுச்சேரியின் சட்டமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும். என். ஆர். காங்கிரஸ் கட்சியில் குழப்பம் வந்த போதும், பா.ஜ.க-வில் குழப்பம் வருகிற போதும் பழிவாங்கப்படுவது தலித் சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள் ஆவார்கள்.
ஏற்கனவே சந்திர பிரியங்காவும், இப்போது சாய் சரவணக்குமாரும் பதவி இழந்திருக்கிறார்கள். இது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க-வின் தலித் சமூக விரோத போக்கை காட்டுகிறது. மேலும் சமூக நீதிக்கு எதிரானதாகும். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிற என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணிக்குள் ஏற்பட்டியிருக்கிற குழப்பம் என்பது பதவி ஆசைக்காகவும், அதிகாரப் பசிக்காகவும் தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆகவே, புதுச்சேரி மக்கள் இந்த நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் நலனை மறந்து பதவி வெறியில் திளைக்கும் பா.ஜ.க-வுக்கும் - என்.ஆர்.காங்கிரஸிற்கும் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.