புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர், சாக்கடை பிரச்சனை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் 24 மணி நேர காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சின்ன மணிகூண்டு எதிரில் நடைபெற்றது. முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்ய முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்-பாஜக அரசு தவறிவிட்டது. முத்தியால்பேட்டை தொகுதியில் மிகப் பெரிய அளவில் குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீரில் டி.டி.எஸ். அளவு 500 ஆக இருக்க வேண்டும். ஆனால், இப்போது முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 14 பூத்துகளில் 2,400க்கு மேல் டி.டி.எஸ். அளவு அதிகமாக உள்ளது என்றும் மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.