புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தின் போது திடீரென மயங்கி சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்.இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர். அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.
இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“