புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ ஜான் குமார் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்ததையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது.
புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.ஏ ஜான் குமார் தனது ராஜினாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் வி.பி.சிவகொழுந்துவிடம் அளித்ததால் புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ்-திமுக கூட்டணி மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி ஆகிய இரண்டுமே 33 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தலா 14 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போது 3 பரிந்துரைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 28 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 எம்.எல்.ஏ.க்களையும் திமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ என ஆளும் கூட்டணி அரசை ஆதரிக்கின்றனர். எதிர்க்கட்சியில் பாஜகவின் 3 பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், என்.ஆர் காங்கிரஸின் 7 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி அரசு ஏற்கனவே சிறுபான்மையாக உள்ளது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரியுள்ளன.
அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து ஜான் குமார் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.
தற்போது ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ ஜான் குமார் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்பட்டார். ஜான் குமார் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லித்தொப்பு தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர், நாராயணசாமிக்காக அந்த தொகுதியை ராஜினாமா செய்தார். பின்னர், 2019ம் ஆண்டு காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக, புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிய முன்னாள் சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். ஒரு நாள் கழித்து ஜான் குமார் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு ஒரு தேர்தல் உத்தியை உருவாக்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே எம்.எல்.ஏ.க்களின் இந்த ராஜினாமாக்கள் வந்துள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு வருகிறா மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"