/indian-express-tamil/media/media_files/2025/08/29/puducherry-congress-eb-2025-08-29-15-33-19.jpg)
புதுச்சேரியை ஆளும் பா.ஜ.க - ரங்கசாமி அரசு மக்களை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் மின் துறையை அதானியிடம் பல கோடிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு விற்பனை செய்து விட்டதாக தெரிய வருகிறது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான மு.இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் மின் துறைக்கு சொந்தமாக மட்டும் தான் அதிகப்படியான சொத்து உள்ளது. மாநிலத்தில் அதிக வருமானம் வரக்கூடிய மிக முக்கியமான துறையாகும். மேலும் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய அரசு நிறுவனமாகும்.
இந்த ஆட்சி அமர்ந்ததிலிருந்து தொடர்ச்சியாக மக்களை வஞ்சிக்க கூடிய வகையில் மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்க கூடிய வகையில் இந்த அரசு பெரிய அண்ணன் மன போக்குடன் செயல்பட்டு வருகிறது. வீட்டிற்கு பயன்படுத்தும் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 70 பைசா இருந்தது கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஆனால் இன்று ரங்கசாமி ஆட்சியில் யூனிட்டுக்கு 3.50 உயர்த்தி விட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மின் கட்டணத்தை உயர்த்தி கொள்கிறார்கள். சாதாரண மக்கள் ஒரு மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பல கோடி ரூபாய் பின் கட்டண பாக்கி வைத்துள்ளார்கள். அதையெல்லாம் வசூலிக்க முடியவில்லை இந்த அரசாங்கத்தால், ஏனென்றால் அவர்களிடம் இந்த அரசாங்கம் மிகப்பெரிய அளவில் லஞ்சம் பெறுகிறது. ஆதலால் இவர்கள் எவ்வளவு வேண்டுமனாலும் பாக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் சாதாரண குடும்பம் என்றால் உடனடியாக மின் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இந்த ஆட்சியில் உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் இலவச மின்சாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை மின்சார திட்டத்தை மாற்றிக் கொண்டே உள்ளார்கள். மாற்ற வேண்டிய காரணம் என்னவென்றால் இந்த ஆட்சியாளர்கள் இப்படி மாற்றும்போது தனியார் மின்சார நிறுவனம் மூலம் பல கோடி லஞ்சம் பெறுகின்றனர். தனியார் அதானி நிறுவனத்திற்கு புதுச்சேரி மின்சார துறையை தாரைவாக்கப்பட்ட விவகாரத்தில் யார் ஊழல் புரிந்திருந்தாலும் அவர்கள் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி மின் துறையை அதானி குழுமத்திடம் விற்பனை செய்து உள்ளதால் ஒவ்வொரு விட்டிற்கும் ஸ்மார்ட் மீட்டர் வைக்க சொல்லி அதில் சிம் கார்டு பொருத்துவார்கள். ஒரு நாள் கரண்ட் பில் கட்ட தாமதமாகுது என்றால் உடனடியாக உட்கார்ந்த இடத்திலே அதானி மின் நிறுவனம் மின் இணப்பை துண்டித்து விடுவார்கள். செல்போன் பில் கட்டவில்லை என்றால் எப்படி போன் கால்களை கட் பண்றாங்களோ அதே போல் மின்சார இணைப்பை துண்டித்து விடுவார்கள். இதில் மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லு நடைபெறும்.
மேலும் இத்துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அனைத்து ஊழியர்களும் அதானி கட்டுப்பாட்டின் கீழ் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இப்பொழுது வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய நிலை கூட ஏற்படலாம். அதானி மின்சார நிறுவனம் வட இந்தியாவில் இருந்து மின் துறைக்கு ஊழியர்களை நியமிப்பார்கள். ஆதலால் இப்பொழுது வேலை செய்யும் மாநில ஊழியர்களின் நிலை மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு மின் துறையை தாரை வார்த்து கொடுக்க வேண்டும் என்று பல இன்னல்களை கொடுத்தும் கடைசி வரை மக்கள் நலன் தான் பெரிது என்று கையெழுத்து போடாமல் ஆட்சியை நடத்தினார் நாராயணசாமி. மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து காங்கிரஸ் அரசாங்கமே பல போராட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நடத்தினோம். அதானி நிறுவனத்தை எதிர்த்து கோர்ட்டுக்கும் சென்று தடை வாங்கினோம்.
புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்டு இருந்ததால் தான் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை எதிர்த்து கடைசி வரை அதானிக்கு மின் துறையை தாரை வார்த்து கொடுக்கவில்லை. ஆனால் இன்று ஆளும் பா.ஜ.க, என்.ஆர் காங்கிரஸ் அரசு, ஆட்சி அமைந்ததும் அதானிக்கு மின் துறையை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். மக்கள் தலையில் மிகப்பெரிய பாரத்தை ஆளும் அரசு சுமத்தி உள்ளது. புதுச்சேரி மின் துறையை தாரை வார்த்து கொடுத்த புதுச்சேரி பா.ஜ.க - ரங்கசாமி அரசை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், அரசு மின் துறையை அதானிக்கு தாரை வார்த்து கொடுத்ததை ரத்து செய்வோம். பழைய மின்சார நடைமுறையை மீண்டும் கொண்டு வருவோம். ஆதலால் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மோடி மற்றும் ரங்கசாமி ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்து வீட்டுக்கு கண்டிப்பாக அனுப்புவார்கள்.
மின் துறையை அதானியிடம் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதை கண்டித்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து மிகப்பெரிய அளவில் புதுச்சேரி மாநிலமே புரட்சி வெடிக்கின்ற வகையில் போராட்டம் நடத்திட வேண்டும். உடனடியாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுவிக்க வேண்டும்.
மேலும் மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலும், புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக தனியார் அதானி குடும்பத்திற்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்சார துறையை ரத்து செய்வோம். மீண்டும் பழைய மின்சார நடைமுறையை கொண்டு வருவோம் என்று உறுதி கூறுகிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.