புதுச்சேரியில் 8 புதிய மதுபான தொழிற்சாலை தொடங்குவதற்கு பல கோடி ரூபாய் ஊழல் செய்ய ஆளும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி காங்கிரஸ் கட்சியினர் துணை நிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஷாஜகான, முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கார்த்திகேயன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேலதாஸ் ஆகியோர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து பனு அளித்தனர்.
இதன்பின்னர், முள்ளாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு 8 அயல்நாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை முடிவு எடுத்து கோப்பு கவர்னருக்கு வரவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி தனது இலாக்காவில் 6 மதுபான தொழிற்சாலை அமைக்க முடிவு எடுத்தார். இதற்கு அப்போதைய கவர்னர் தமிழிசை ஒப்புதல் தரவில்லை.
இதற்கிடையில், இந்த தொழிற்சாலைகளுக்கு பி.பி.ஏ அனுமதி தந்துள்ளது. தொழில் துறையானது தொழில்துவங்க முதல் கட்ட அனுமதி தந்துள்ளனர். ஆளுநர் ஒப்புதல் இல்லாத காரணத்தால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த கோப்பை அமைச்சரவையில் வைத்து 8 நிறுவனங்களுக்கு அயல்நாட்டு மதுபானம் கம்பெனி தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த தகவல் தெரிந்தவுடன் இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கருதியது. அதையடுத்து கவர்னரை சந்தித்து மனு தந்துள்ளோம். அயல்நாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பாக பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சட்டமன்றத்தில் பேசினார்.
புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை தொடங்க அரசு அனுமதி தந்ததாக தெரிகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையும் தலா ரூ. 10 கோடி தந்ததாக பகிரங்கமாக ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ புகார் தெரிவித்தும் முதலமைச்சர் தரப்பில் மறுப்பு இல்லை.
புதுச்சேரியில் இதற்கு அனுமதி தர அவசியம் என்ன? ஏற்கெனவே 6 தொழிற்சாலைகள் இருந்தும் முழுவதுமாக செயல்படவில்லை. தண்ணீரை அதிகமாக பயன்படுத்தும் தொழிற்சாலை ஆரம்பிக்கக்கூடாது என தடையாணை இருக்கிறது. பி.பி.ஏ அனுமதி ஒப்புதல் தந்தது யார்- தொழில் துறை எப்படி அனுமதி தந்தது. பல நூறு கோடி லஞ்சம் பெற மது தொழிற்சாலைக்கு ஒப்புதல் தந்துள்ளனர். அப்போதைய தலைமைச்செயலர் அஸ்வினி குமார் 2 மனுக்கள் தாமதமாக வந்ததாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் தொகை 15 லட்சமே உள்ளனர். தற்போது இருக்கும் நிறுவனங்கள் தயாரிப்பே அதிகம். இன்னும் புதிதாக 8 தொழிற்சாலைக்கு தேவை என்ன? இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி கவர்னரை சந்தித்தோம். டெல்லியில் அரவிந்தர் கெஜ்ரிவால் அரசு மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறை சென்றார்.இப்படிப்பட்ட சூழலில் லஞ்சம் பெற்று மக்களை ஏமாற்றும் அரசை எதிர்த்து விசாரணை நடத்த கோரியுள்ளோம்
தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி பாதிப்பு விவகாரத்தில், அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. பெண்ணை தொட்டாலே பலாத்காரம். அவர் தாக்கப்பட்டுள்ளார். இதனை எதிர் கட்சித்தலைவர் விசாரித்து பதில் தரவேண்டும். மதுஆலை விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசம் இல்லை. யாராருக்கு மது ஆலை கொடுத்துள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும். எங்கள் கட்சி வேலை செய்கிறது. கூட்டணி குறித்து தி.மு.க-விடம் கேளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.