புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளைசாவடி, சின்ன காலாப்பட்டு மீனவ கிராமங்களில்* தற்பொழுது பெய்து வரும் கன மழையினால் கடல் சீற்றம் அதிகமாகி
கடற்கரை சாலை மற்றும் வீடுகள் சேதம் அடைந்தும்,
மீன்பிடித் தொழில் செய்ய படகுகள் நிறுத்த முடியாத அளவிற்கும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் M.O.H.F. ஷாஜகான், பிள்ளை சாவடி மற்றும் சின்ன காலாப்பட்டு மீனவ கிராம கடற்கரை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஊர் பொதுமக்களும், மீனவ பஞ்சாயத்தாரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அவர்கள் பிள்ளைச்சாவடி கிராமத்தில் தனியாருக்கு ஆதரவாக கல் கொட்டப்பட்டுள்ளது எனவும்,
மீனவர் கிராமத்திற்கு பயன்படாத வகையில் அரசாங்கம் செயல்பட்டுள்ளது எனவும் புகார் தெரிவித்தனர்.
மேலும், தற்பொழுது கடற்கரையில் கிழக்கு நோக்கி கல் கொட்டப்பட்டுள்ள பரப்பை மேலும் 50 மீட்டர் அளவிற்கு கல் கொட்டி நீட்டிக்க வேண்டும் எனவும் பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு எல்லை பகுதியில் கல் கிழக்கு நோக்கி கொட்ட வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மீனவ கிராமத்தின் வீடுகள் மற்றும் சாலைகள் வரும் காலங்களில் பாதுகாக்கப்படும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்டு அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலந்து ஆய்வு கூட்டம் நடத்தி தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பிள்ளை சாவடி மற்றும் சின்ன காலாப்பட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், மீனவ பஞ்சாயத்தாரும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“