திருபுவனையில் முன் விரோதம் காரணமாக தனியார் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி திருபுவனை மேம்பாலத்திற்கு தெற்கே உள்ள சர்வீஸ் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில், கடந்த 20 ஆண்டுகளாக ரெட்டியார் மெஸ் என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (50) இந்த ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு சுகாசினி என்ற மனைவியும், ராகுல் (23) என்ற மகனும் உள்ளனர். ராகுல் கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ராகுலும், திருவாண்டார்கோயிலை சேர்ந்த சபரி என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில், சபரி, அதே சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி சபரி அந்த பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார். தனது நண்பர் காதலித்த பெண்ணை எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள ராகுல் உறுதுணையாய் இருந்துள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர் ராகுலுக்கும், சபரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஒரு வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒசூரில் வேலை செய்து வந்த ராகுல் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று சபரி திருபுவனையில் உள்ள ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்கச் சென்றபோது, அங்கு சபரியின் மாமனாரும், ராகுலும் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
ஏ.டி.எம்.,க்கு வந்த சபரியைக் பார்த்த அவரது மாமனார், இதோ போரான் பாரு என் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தவன் எனக்கூறி தரக்குறைவாக திட்டியுள்ளார். அதைக்கேட்டு ராகுல் சிரித்துள்ளார். மாமனார் தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டு ராகுல் சிரித்ததால் ஆத்திரம் அடைந்த சபரி அங்கிருந்து கடும் கோபத்துடன் சென்றுள்ளார். இதனிடையே, நேற்று இரவு 7.25 மணிக்கு ஒரு ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ராகுலின் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஓட்டலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த இரும்பு சீட் சேதம் அடைந்து, சுவற்றின் சிமெண்ட் காரைகள் கிதறியது.
குண்டு வெடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டதால் கடை வீதியில் இருந்து வியாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மர்ம ஆசாமிகள் ஸ்கூட்டியில் வந்தது. ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றது அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நேற்று இரவு ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகினறனர். முன்விரோதம் காரணமாக ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீிசிய சம்பவம் திருபுவனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல் போலீசாரிடம் கூறுகையில் இன்று (நேற்று) பகல் 12.15 மணிக்கு மொபைல் போனில் ஒருவர் ஓட்டலை காலி செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும், பகல் 1;30 மணிக்கு திருவாண்டார்கோயிலை சேர்ந்த 2 பேர் ஒரு ஸ்கூட்டியில் வீட்டிற்கே வந்து தன்னை மிரட்டிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருபுவனை போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் சென்று, சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தியின் மகன் சபரி,திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்த பிரபாகரன் வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.