துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மக்களின் அரசியல், ஜனநாயக உணர்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது திறன் இல்லாததை வெளிக்காட்டுகிறது என புதுச்சேரி சி.பி.எம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தின் கட்டண மருத்துவ சேவையை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி 05.05.2023 ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் போராட்டத்தை இழிவு படுத்தியும், தலைவர்களை அரசியல் நாகரீகம் அற்ற முறையிலும் பேசி உள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்து வந்த இவர், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 17.02.2021 கூடுதல் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதுச்சேரிக்கு வந்தது முதல் இன்று வரையிலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை. மாறாக பாஜகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு செய்தி தொடர்பாளரை போல விளக்கம் அளிப்பது, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை, மற்றும் சட்டங்களை விளம்பரம் செய்யும் தூதுவராகவே செயல்படுகிறார். தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி “சனாதனத்தை” நடைமுறைப்படுத்தும் அரசியலை முன்னெடுத்து வருகிறார்.
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் நிராகரிப்பு
இவ்வாறாக தான் வகிக்கும் பொறுப்பான பதவியை மறந்து செயல்படுவது துணைநிலை ஆளுநருக்கு அழகு அல்ல. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு புதுவையில் என்ன வேலை? விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்! என்ற துணைநிலை ஆளுநர் பேச்சை புதுச்சேரி மாநில மக்கள் ரசிக்கவில்லை. ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் மத்தியில் இது கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலங்கானா ஆளுநராக இருந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் இரவல் ஆளுநராக தொடர்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர் ஏன் புதுச்சேரியில் ஆளுநராக இருக்கிறார் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மக்களின் அரசியல், ஜனநாயக உணர்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது திறன் இல்லாததை வெளிக்காட்டுகிறது.
மத்தியில் மோடியும், மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2015 செப்டம்பர் வரையில் ரேஷன் கடைகள் இதுவரை புதுச்சேரியில் திறக்கப்படவில்லை.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களின் ஒப்புதலோடு வகைத்தொகை இல்லாமல் மதுக்கடைகள், ரெஸ்டோபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் கூட புதுச்சேரியை சேர்ந்த இரண்டு பேர் மது தொழிற்சாலைக்கு அனுமதி கோரியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. கமிஷன் கொடுக்கப்படவில்லை என்பதனாலா? அல்லது தகுதி இல்லை என்பதனாலா? என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். ஜிப்மர் மருத்துவமனையில் தரமான மருத்துவம், இலவச மருத்துவம், புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.
ஆளுநரின் திசை திருப்பும் செயல்
2014-ல் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு நிலைமை மோசம் அடைந்துள்ளது. அனைவருக்கும்மான இலவச மருத்துவம் மறுக்கப்படுகிறது. புதுச்சேரி இளைஞர்களுக்கு நான்காம் நிலை ஊழியர் பணி கூட கிடைப்பதில்லை. இந்த உண்மைகளை மறைத்து ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை மூடி மறைக்க, திசை திருப்ப முயலும் ஆளுநரின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. ஆளுநர் தங்களின் சார்பு நிலை அரசியலை கைவிட்டு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும். அது இயலாது என்று அவர் கருதினால் துணைநிலை ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“