/indian-express-tamil/media/media_files/2025/10/30/cpm-sir-2-2025-10-30-22-40-55.jpg)
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 (Special Intensive Revision - SIR 2026) என்ற ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) - சி.பி.ஐ (எம்) கடும் கண்டனம்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 (Special Intensive Revision - SIR 2026) என்ற ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) - சி.பி.ஐ (எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் இத்திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்தக் கூடாது என்பதையும் கேட்டுக்கொள்கிறோம் என்று சி.பி.எம் தெரிவித்துள்ளது.
நடத்தப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு இன்று (அக்டோபர் 30, 2025) கட்சியின் சார்பில், இத்திட்டத்தை எதிர்த்து, புதுச்சேரி முதன்மை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அதிகாரியிடம் மாநிலக்குழு சார்பில் விரிவான கண்டனக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்: சி.பி.ஐ (எம்) குற்றச்சாட்டுகள்
கடிதத்தில், சி.பி.ஐ (எம்) கட்சி, எஸ்.ஐ.ஆர் (SIR) 2026 திட்டத்தை 'அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை மீறல் நடவடிக்கை' என்றும், 'உழைக்கும் மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம்' என்றும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கண்டனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய அம்சங்கள்:
தன்னிச்சையான முடிவு: அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் எந்தவிதமான முன் ஆலோசனையும் செய்யாமல், தேர்தல் ஆணையம் அதிகார அத்துமீறல்களுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைவது, ஜனநாயக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
சட்டத்தை அவமதித்தல்: எஸ்.ஐ.ஆர் (SIR) அமலாக்கம் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே சிக்கலான திருத்த முறையைத் திணிப்பது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் சுருக்க முறைத் திருத்தம் போதுமானதாக இருக்கும்போது, சிரமமான எஸ்.ஐ.ஆர்-ஐ கட்டாயப்படுத்துவது உள்நோக்கம் கொண்டது.
விளிம்பு நிலை மக்கள் புறக்கணிப்பு: ஆதார்யை கட்டாயமாக்கிவிட்டு , அதனைச் சரிபார்ப்புக்குக் மட்டும் ஏற்கமுடியாது என்பது வாக்குரிமையைப் பறிக்கும் அபாயம் உள்ளது. நிரந்தர வீடோ, வலுவான ஆவணங்களோ இல்லாத தலித், பழங்குடி மக்கள், நரிக்குறவர், வாடகை வீடுகளில் வசிக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் திட்டமிட்டுக் களையெடுக்கப்படுவார்கள் என்றும் இது சிறுபான்மை, தலித், பெண்கள் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாரபட்சமான செயல்பாடு: எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.க பலவீனமாக உள்ள மாநிலங்களில் மட்டும் எஸ்.ஐ.ஆர் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால் பா.ஜ.க ஆளும் அஸ்ஸாமுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது பாரபட்சமான செயல் என்றும், அதேபோன்று புதுச்சேரிக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகக் குழப்பம்: பருவமழை தீவிரமடையும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் களப்பணியை மேற்கொள்ள முடியாது; கால அவகாச நெருக்கடியால் தவறான தரவு உள்ளீடும், வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படவோ வாய்ப்புள்ளது என்றும் கட்சி நிர்வாகச் சீர்குலைவைக் குறித்து எச்சரித்துள்ளது.
சி.பி.ஐ (எம்)-ன் நிலைப்பாடு
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை சிதைவதாகவும், குடியுரிமையை நிர்ணயிக்கும் பணி ECI-இன் அதிகார வரம்புக்குள் வராது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் சிறப்புசீர் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். வழமையாக நடக்கும் திருத்தப் பணிகளை மட்டும் மேற்கொண்டு, வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் வெளிப்படைத் தன்மையோடு நேர்மையாக நடத்திடுமாறு சி.பி.ஐ (எம்) கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us