தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு துணை போனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் சார்பில், வங்கி மற்றும் பைனான்ஸ் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இணையவழி காவல் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சைபர் க்ரைம் எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சைபர் க்ரைம் தொடர்பான புகார்கள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய எஸ்பி பாஸ்கரன், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை வங்கி அல்லாத நிதி நிறுவனம் மேலாளர்களை போன்று செல்போன் மற்றும் இதர செயலிகள் மூலம் தொடர்புக்கொண்டு ஆன்லைன் மூலமாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சைபர் குற்றவாளிகள் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவதற்கு தனியார் நிதி நிறுவனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.தனியார் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் எவரேனும் இணைய வழி குற்றவாளிகளுக்கு துணை போவதாக தெரிய வந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி