தமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இங்கு திமுக முன்னெடுக்கும் வியூகம் அரசியல் அரங்கை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஆம், காங்கிரஸை கழற்றிவிட்டு அங்கு களம் காண இருக்கிறது திமுக. இதற்காக முதல்வர் வேட்பாளரையும் தயார் செய்துவிட்டது.
தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகத்ரட்சகன் தான் திமுக தயார் செய்து வைத்திருக்கும் அந்த முதல்வர் வேட்பாளர்! சுமார் 11 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெகத், அதைவிட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகக் கொண்ட மொத்த புதுவைக்கும் முதல்வர் ஆவது பெரிய காரியம் இல்லை என களம் இறங்கிவிட்டார்.
திங்கட்கிழமை பாண்டிச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதற்கு சிறப்பு அழைப்பாளர் ஜெகத்தேதான்! இதற்காக , ‘மண்ணின் மைந்தரே வருக, மக்களாட்சி தருக’ என ஜெகத்தை வரவேற்று புதுவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள், புதுவை திமுக.வினர்!
புத்தாண்டு முதலே புதுவையை தயார் செய்யும் பணியை தொடங்கிவிட்டார் ஜெகத். பல்லாயிரகணக்கான காலண்டர்களை புதுவை மக்கள் விரும்பும் வகையில் அச்சிட்டு தனது பெயரில் புதுவையில் வினியோகம் செய்து முடித்திருக்கிறார். அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளில் யார் யாரை எப்படி வளைக்க வேண்டும் என்கிற திட்டங்களும் பக்காவாக ரெடியாகிவிட்டதாம்!
புதுவையில் ஜெகத்ரட்சகனை வரவேற்று போஸ்டர்
திமுக.வின் இந்த திடீர் வியூகத்திற்கு காரணம்?
காங்கிரஸ் கட்சி புதுவையில் ரொம்பவே பலவீனமாகிவிட்டதாக அந்த மாநில திமுக.வினர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருக்கும் நாராயணசாமி மீதான அதிருப்தியில் பெரும் கூட்டம் பாஜக.வை நோக்கிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் பலமாக இல்லை. எனவே தனித்துப் போட்டியிட்டு அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு திமுக.வே முதல்வர் பதவியைக் கைப்பற்ற முடியும் என எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஸ்டாலினும் அதை ஏற்றுக் கொண்டார்.
2021 மே மாதத்திற்கு பிறகு தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் ஸ்டாலின், புதுவையிலும் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் டெல்லியில் ஆதிக்கம் செலுத்த பெரிதும் உதவியாக இருக்கும் என கருதுகிறாராம். இதைத் தொடர்ந்தே ஜெகத்தை களம் இறக்கியிருக்கிறார்.
புதுவையின் மெஜாரிட்டியான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகத். தேர்தல் செலவுகளை சமாளிக்க சுணங்காதவர். திமுக தலைமைக்கு விசுவாசமானவர் மட்டுமல்ல, பொதுச்செயலாளரான துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர். எனவே இவரை மண்ணின் மைந்தராக ஏற்றுக் கொண்டு பணி செய்யத் தயாராகிவிட்டார்கள் புதுவை திமுக.வினர்.
ஒருவேளை ஜெகத்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க நாராயணசாமியும் காங்கிரஸும் முன்வந்தால், காங்கிரஸுடன் கூட்டணியை திமுக தொடருமாம். இல்லாதபட்சத்தில் 4 முனை அல்லது 5 முனைப் போட்டி நிலவும் புதுவையில் சுலபத்தில் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை திமுக.வுக்கு!
திமுக சார்பில் 1970-களில் ஃபரூக், 1980- 1990-களில் இருமுறை ராமச்சந்திரன், 1996-2000-ல் ஜானகிராமன் என மொத்தம் 4 முறை புதுவையில் முதல்வர் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். 5-வது முறையாக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் கணக்குடன் இறங்கியிருக்கிறது திமுக.
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிட திமுக தயாராகியிருப்பது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினருக்கு புளியைக் கரைத்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"