புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் இன்று காலை 11:30 மணிக்கு நடத்தும் சுதந்திர தின தேநீா் விருந்தை காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூா் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் அளிக்கும் தேநீா் விருந்தை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணிக்கிறது.
மேலும், மக்கள் தோ்ந்தெடுத்த அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஒடுக்கும் போக்கையும் கருத்தில் கொண்டு புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், புதுவை மாநில மக்களுக்கு எதிராகவும், ஆளுநா் என்பதை மறந்தும் தொடா்ந்து அரசியல் பேசி வருவதை கண்டிக்கும் வகையில் அவரது தேநீா் விருந்தை புறக்கணிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil