அமைச்சர் பதவி விலகக் கோரி புதுச்சேரி பேரவையில் தர்ணா: எதிர்க் கட்சித் தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைப் பொறியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைப் பொறியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
a

புதுச்சேரி சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இணையாக பணியாற்றிய பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இது புதுச்சேரி அரசுக்கு அவப்பெயர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டும். இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.

Advertisment

இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, துணைத் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாக. தியாகராஜன், காங்கிரஸ் கட்சித் தலைவர் மு. வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையின் மைய மண்டபத்தின் நடுவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேரவைத் தலைவர் தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக வெளியேற்ற சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சபைக் காவலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் ஆகியோர் ரூ. 7 கோடி ஒப்பந்தத்திற்கு லஞ்சம் வாங்கியபோது காரைக்காலில் சி.பி.ஐ. அதிகாரிகளால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரைக்காலில் ஒரு ஒப்பந்த பணிக்கு இவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது. தலைமைப் பொறியாளரின் பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு என்ன செய்யப்போகிறது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம். ஆனால் பேரவைத் தலைவர் ஆளும் அரசுக்கு ஆதரவானவர் என்பதால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டோம். அதற்கும் செவிமடுக்காத பேரவைத் தலைவர் எங்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார். அதனபடி நாங்கள் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டோம்.

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறைகளில் அனைத்து பணிகளும் முடங்கிப்போய் உள்ளது. பேரவையில் அத்துறை சம்பந்தமாக எழும் கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள். ஆகவே, பொதுப்பணித்துறைக்கு அமைச்சராக இருக்கும் லட்சுமிநாராயணன் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினோம். எங்கள் கோரிக்கையை மதிக்காமல் சபையை தொடர்ந்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் மக்கள் பணத்தில் உண்டுக்கொழுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் சட்டம் இயற்றி தண்டிக்க அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 

Advertisment
Advertisements

இதுதொடர்பாக துறை அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துவோம். பொதுப்பணித்துறையில் நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்போம். குறிப்பாக தரமாக இருந்த புதிய பஸ் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மோசமான நிலையில் பலகோடி செலவு செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. தொடர்ந்து சிபிஐ–யின் நடவடிக்கையை கண்காணித்து அதற்கு தகுந்தார்போல் எங்களின் போராட்டம் இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: