புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா தலைமையிலான நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ் நிவாஸில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், "அரசு அறிவித்தது போன்று புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்குவதுடன் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளிட்ட காலியாக உள்ள அரசு பணி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நகரப் பகுதியில் ஹெல்மெட் அணிவதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும்" உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா, "புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து அரிசி வழங்குவதுடன் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.
மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது. மதுபான கொள்கை வெளிப்படுத்த தன்மையோடு இல்லை வேண்டியவர்களுக்கு மட்டும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவி விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.